Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ போஸ்டர் செய்தி -- 1 கிலோ பிளாஸ்டிக்கிற்கு ஒரு வேளை உணவு இலவசம்

போஸ்டர் செய்தி -- 1 கிலோ பிளாஸ்டிக்கிற்கு ஒரு வேளை உணவு இலவசம்

போஸ்டர் செய்தி -- 1 கிலோ பிளாஸ்டிக்கிற்கு ஒரு வேளை உணவு இலவசம்

போஸ்டர் செய்தி -- 1 கிலோ பிளாஸ்டிக்கிற்கு ஒரு வேளை உணவு இலவசம்

ADDED : ஜூலை 05, 2024 06:21 AM


Google News
மைசூரு: 'மைசூரில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த, ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவோருக்கு, இந்திரா உணவகத்தில் மதியம் அல்லது இரவு உணவு இலவசமாக வழங்கப்படும்' என மைசூரு மாவட்ட நிர்வாகம், புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

கலாசாரம், அரண்மனை நகரம் என பெயர் பெற்ற மைசூரில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில், மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக்கை ஒழிக்க, மைசூரு மாவட்ட நிர்வாகம், புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, மைசூரு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் வெங்கடேசன் அளித்த பேட்டி:

மாநில அரசு நடத்தும் இந்திரா உணவகங்களில், தினமும் காலை, மதியம், இரவு உணவு வழங்கப்படுகிறது. காலை 5 ரூபாய்க்கும், மதியம், இரவு தலா 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

* யார், யார்?

தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், கிராமப்புற பயணியர், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் போன்றோர் பயனடையும் வகையில் அமல்படுத்தப்பட்டது. மைசூரு மாநகராட்சியின் கீழ் 11ம்; மாவட்டத்தில் ஐந்தும் என மொத்தம் 16 இந்திரா உணவகங்கள் உள்ளன.

நகரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க, மாவட்ட நிர்வாகம் புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம், அரை கிலோ முதல் ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இந்திரா உணவகத்தில் மதியம் அல்லது இரவு உணவு இலவசமாக வழங்கப்படும். இது தொடர்பாக அனைத்து இந்திரா உணவக நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* தடுப்பு திட்டம்

இதனால் நகரில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்க முடியும் என நம்புகிறோம். இந்த வாய்ப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக பிளாஸ்டிக் சேகரிப்போரை மனதில் வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறுவுறுத்தலின்படி, பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, பிரசாரம் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

... புல் அவுட் ...

கலாசார நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும், இலவச உணவு திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

ராஜேந்திரா, கலெக்டர், மைசூரு.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us