'மூடா' ஒதுக்கிய நிலம் பயன்படுத்த தற்காலிக தடை
'மூடா' ஒதுக்கிய நிலம் பயன்படுத்த தற்காலிக தடை
'மூடா' ஒதுக்கிய நிலம் பயன்படுத்த தற்காலிக தடை
ADDED : ஜூலை 05, 2024 06:22 AM
பெங்களூரு: 'மூடா'வில் இருந்து பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பயன்படுத்துவதற்கு, அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு வாரியம் சார்பில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, லே- -- அவுட்கள் அமைக்கப்படுகின்றன. இந்த லே- - அவுட் நிலம் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் 'மூடா' சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக, பா.ஜ., குற்றம் சாட்டியது. முதல்வரின் மனைவி பார்வதிக்கும் நிலம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மூடாவில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரிக்க, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை முடியும் வரை, மூடாவில் இருந்து பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பயன்படுத்துவதில், தற்காலிக தடை விதிக்க வேண்டும் என, நகர வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷ், முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மூடாவில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலத்தை, பயனாளிகள் தற்காலிகமாக பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
மூடாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. என் மனைவி பார்வதி கொடுத்த நிலத்திற்கு நிவாரணமாக, மைசூரு விஜயநகரில் தான் எங்களுக்கு நிலம் வேண்டும் என்று, நாங்கள் கேட்கவில்லை.
பா.ஜ., ஆட்சியில், எனது மனைவி கொடுத்த நிலத்திற்கு பதிலாக, விஜயநகரில் இடம் ஒதுக்கினர். என் மனைவி 3.16 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளார். அந்த நிலத்தின், தற்போதைய மதிப்பு 62 கோடி ரூபாய். நான் முதல்வராக இருப்பதால், எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமா?
இவ்வாறு அவர் கூறினார்.