அரசியல் பேசும் மடாதிபதிகள் காங்., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு
அரசியல் பேசும் மடாதிபதிகள் காங்., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு
அரசியல் பேசும் மடாதிபதிகள் காங்., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு
ADDED : ஜூலை 05, 2024 06:29 AM

ராய்ச்சூர்: ''அரசியல் பற்றி மடாதிபதிகள் பேசுவதும், முதல்வர் பதவி பற்றி கருத்து தெரிவிப்பதும் சரியல்ல,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹம்பனகவுடா பத்ரேலி கூறியுள்ளார்.
ராய்ச்சூர் சிந்தனுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹம்பனகவுடா பத்ரேலி நேற்று அளித்த பேட்டி:
சிந்தனுார் தாலுகா துருவி ஹால் நகரில் 30 கோடி ரூபாய் செலவில், ஏரி அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், ஏரி அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கப்படும்.
கோடை காலத்தில் சிந்தனுாரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து முதல்வர், நீர்ப்பாசன அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, சிங்கடாலுார் தடுப்பணையில் இருந்து சிந்தனுார் நகருக்கு தண்ணீர் கொண்டு வந்தேன். மழை பெய்யும் நேரங்களில் தண்ணீரை சேமித்து வைப்பது அவசியம்.
சித்தராமையா முதல்வராக இருக்க வேண்டுமென, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருமனதாக முடிவு எடுத்தோம். தற்போது அவரை மாற்ற வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர். இது பற்றி முடிவு எடுக்க வேண்டியது கட்சி மேலிடம்.
ஒவ்வொரு சமூக மடாதிபதிகளும் தங்கள் சமூகங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என கேட்க ஆரம்பித்துள்ளனர். மடாதிபதிகள் மீது எனக்கு மரியாதை உள்ளது. அரசியல் பேசுவதும், முதல்வர் பதவி பற்றி கருத்து தெரிவிப்பதும் சரியல்ல.
மேலும் இரண்டு துணை முதல்வரை நியமித்தாலும் தவறில்லை. எங்கள் மாவட்டத்தில் மூன்று பேருக்கு எம்.எல்.சி., பதவி கிடைத்தது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.