'வெள்ள பாதிப்பை மக்கள் பார்க்க மாட்டார்கள்'
'வெள்ள பாதிப்பை மக்கள் பார்க்க மாட்டார்கள்'
'வெள்ள பாதிப்பை மக்கள் பார்க்க மாட்டார்கள்'
ADDED : ஜூன் 11, 2024 07:57 PM

புதுடில்லி:“பருவமழை காலத்தில் இம்முறை டில்லியில் வெள்ளப் பிரச்னை ஏற்படாது. வெள்ள பாதிப்பை இந்த ஆண்டு மக்கள் பார்க்க மாட்டார்கள்,” என, மாநில நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக டில்லியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் இந்த ஆண்டு பருவமழை வருவதற்கு முன்னதாக, மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.
யமுனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப் பணிகளை மாநில நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் நேற்று ஆய்வு செய்தார். யமுனை ஆற்றை துார்வாரும் பணிகளையும் ஐ.டி.ஓ., தடுப்பணையையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:
யமுனை நதியில் வெள்ளம் வந்தால், அது செல்வதற்கு வசதியாக வாய்க்கால் இருக்கும். அதனால் இந்த முறை நகரம் வெள்ளத்தில் மூழ்காது.
ஐ.டி.ஓ., தடுப்பணை ஹரியானா அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. கடந்த ஆண்டு யமுனை ஆற்றின் பாதையில் தடைகள் இருந்ததால், நகரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. யமுனை வழியாக வெள்ளம் பாய்ந்தால், தடைகளை அகற்றும். யமுனைக்கு தெளிவான கால்வாய் கிடைக்கும். இந்த முறை வெள்ளம் வராது என்பதை நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சராக கூற முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.