Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பெயர் பலகையில் உரிமையாளர் விபரம்: ம.பி., அரசும் அதிரடி

பெயர் பலகையில் உரிமையாளர் விபரம்: ம.பி., அரசும் அதிரடி

பெயர் பலகையில் உரிமையாளர் விபரம்: ம.பி., அரசும் அதிரடி

பெயர் பலகையில் உரிமையாளர் விபரம்: ம.பி., அரசும் அதிரடி

ADDED : ஜூலை 22, 2024 01:06 AM


Google News
போபால் : உத்தர பிரதேசத்தை தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினில் உள்ள கடைகளின் வாயிலிலும் உரிமையாளர் பெயர் மற்றும் 'மொபைல் எண்' அடங்கிய பலகையை வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கன்வர் யாத்திரை செல்லும் வழியில் உள்ள உணவகங்களில், அவற்றின் உரிமையாளர்கள் பெயர் மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்கள் அடங்கிய பலகை வைக்கும்படி மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உத்தரகண்டில் இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது.

கடும் எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்திலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இங்கு, உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள காளி கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. நாடு முழுதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருவது வழக்கம்.

ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். வட மாநிலங்களில் ஆடி மாதம் இன்று தான் துவங்குகிறது.

இதையடுத்து உஜ்ஜயினில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, உஜ்ஜயினில் கடை வைத்துள்ள வியாபாரிகள், கடையின் வாயிலில் தங்கள் பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பலகையை வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவை முதல்முறை மீறுவோருக்கு 2,000 ரூபாயும், இரண்டாவது முறை மீறுவோருக்கு 5,000 ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முஸ்லிம் வியாபாரிகளை குறிவைத்து, அவர்களின் வர்த்தகத்தை முடக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

உத்தரவு

இது குறித்து, உஜ்ஜயின் மேயர் முகேஷ் தத்வல் கூறியதாவது:

உஜ்ஜயின் புனித தலம், நாடு முழுதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அங்குள்ள கடைகளில் அவர்கள் பொருட்கள் வாங்கும்போது கடைக்காரர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது.

அவர்கள் வழங்கும் சேவையில் அதிருப்தியோ அல்லது அவர்கள் ஏமாற்றப்பட்டாலோ அது குறித்து புகார் தெரிவிக்க இந்த நடைமுறை உதவும்.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வியாபாரிகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கம் துளியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us