அதிகாரிகள் ரோந்து: குப்பை கொட்டுவோருக்கு அபராதம்
அதிகாரிகள் ரோந்து: குப்பை கொட்டுவோருக்கு அபராதம்
அதிகாரிகள் ரோந்து: குப்பை கொட்டுவோருக்கு அபராதம்
ADDED : ஜூலை 02, 2024 10:59 PM
மைசூரு : துாய்மை நகர் என்ற பெருமை பெற்றுள்ள, மைசூரில் குப்பை பிரச்னை துவங்கியுள்ளது. இதற்கு தீர்வு காண, மாநகராட்சி சார்பில், 'நைட் ரைடு' துவங்கியுள்ளனர்.
மைசூரு நகருக்கு, துாய்மை நகர் என்ற பெருமை உள்ளது. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்கும் விருதை பெற்ற நகராகும். ஆனால் சில ஆண்டுகளாக, விருது கை நழுவுகிறது. இதற்கு குப்பை பிரச்னையே காரணம்.
மைசூரில் குப்பை பிரச்னை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள், பாஸ்ட் புட் வியாபாரிகள் உள்ளிட்டோர் கண்ட இடங்களில் குப்பையை வீசிச் செல்கின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லை. இவர்களால் மைசூரு அசுத்தமடைகிறது.
குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, மைசூரு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 'நைட் ரைடு' நடவடிக்கையை துவங்கியுள்ளது. இரவில் ரோந்து சுற்றி, குப்பை கொட்டுவோரிடம் அபராதம் விதிக்கிறது.
மைசூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது உலகையே குப்பை பிரச்னை வாட்டுகிறது. பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் கண்ட இடங்களில் கிடக்கின்றன.
மைசூரு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், தினமும் 65 வார்டுகளுக்கு சென்று ஈரக்குப்பை, உலர்ந்த குப்பை சேகரிக்கின்றனர். 550 டன் குப்பை உருவாகிறது. இதில் 30 சதவீதம் பிளாஸ்டிக் கழிவாகும்.
துர்நாற்றம்
சில ஹோட்டல்கள், பாஸ்ட்புட் கடை வியாபாரிகள், பொது மக்கள் பிளாஸ்டிக் கவர்களில், குப்பையை நிரப்பி இரவு நேரத்தில் சாலைகளில், காலி இடங்கள், புதர்கள், வீட்டுமனைகளில் போட்டு செல்கின்றனர். இந்த குப்பை அப்புறப்படுத்தாததால், அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு கடிவாளம் போடும் நோக்கில், நைட் ரைடு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாநகராட்சியின், 130க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள், மாநகராட்சி கமிஷனர், சுகாதார அதிகாரிகள் நைட் ரைடில் பங்கேற்கின்றனர்.
யாராவது குப்பை போடுவது தெரிந்தால், அவர்களை தடுத்து நிறுத்தி 500 முதல், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். இரவு வீசப்பட்ட குப்பையை, துப்புரவு தொழிலாளர்கள் அகற்றுவர். சில இடங்களில் ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. குப்பை வீசிச் செல்லும் வாகனங்களின் பதிவு எண், இந்த சாதனத்தில் பதிவாகிறது.
ஒத்துழைப்பு
யார் குப்பையை வீசினாலும், அவர்களின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படும்.
மைசூரு நகரை சுத்தமாக வைத்திருப்பதில், பொதுமக்களும் மாநகராட்சியுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.