நொய்டா விமான நிலைய விரிவாக்கம் விவசாயத்தை காக்க எம்.எல்.ஏ., பரிந்துரை
நொய்டா விமான நிலைய விரிவாக்கம் விவசாயத்தை காக்க எம்.எல்.ஏ., பரிந்துரை
நொய்டா விமான நிலைய விரிவாக்கம் விவசாயத்தை காக்க எம்.எல்.ஏ., பரிந்துரை
ADDED : ஜூன் 07, 2024 08:31 PM
நொய்டா:“புதுடில்லி அருகே நொய்டாவின் ஜெவாரில் அமையும் கிரீன் பீல்டு சர்வதேச விமான நிலையம் நகரங்கள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி விவசாயம் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்,” என ஜெவார் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ திரேந்திர சிங் கூறினார்.
புதுடில்லி அருகே உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள நொய்டாவின் ஜெவாரில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த விமான நிலையத்தைச் சுற்றி நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. ஆனால், இதற்கு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெவார் எம்.எல்.ஏ., திரேந்திர சிங் நேற்று, யமுனா விரைவுச்சாலை தொழிற்துறை மேம்பாட்டு ஆணையை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் எதிர்ப்பு குறித்து 2 மணி நேரம் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, திரேந்திர சிங் பேசியதாவது:
நகரின் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்துகிறது. அதேநேரத்தில், விவசாயிகளின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
யமுனா விரைவுச் சாலை அருகே அமைந்துள்ல கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை கையகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகை மற்றும் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல, திட்டமிடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சியை மட்டுமின்றி கிராமங்களின் வளர்ச்சியையும் நோக்கியே இருக்க வேண்டும்.
சிறந்த தொழிற்சாலைகள் மற்றும் விரிவடைந்த நகரங்களை கட்டமைப்பதில் காட்டும் அக்கறையை கிராமங்கள் மற்றும் விவசாயத் துறை வளர்ச்சியிலும் செலுத்த வேண்டும். கிராமங்களில் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
யமுனா விரைவுச் சாலை மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி அருண் வீர் சிங், விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பதாக எம்.எல்.ஏ.,விடம் உறுதியளித்தார்.
ஜெவாரில் 1,300 ஹெக்டேரில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையத்தின் முதற் கட்ட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. மொத்த திட்டமும் 5,000 ஹெக்டேரில் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடக்கிறது.