சொத்து வரிக்கு இனி காசோலை வேண்டாம்! டில்லி மாநகராட்சி அதிரடி முடிவு
சொத்து வரிக்கு இனி காசோலை வேண்டாம்! டில்லி மாநகராட்சி அதிரடி முடிவு
சொத்து வரிக்கு இனி காசோலை வேண்டாம்! டில்லி மாநகராட்சி அதிரடி முடிவு
ADDED : ஜூன் 06, 2024 02:37 AM
புதுடில்லி:'ஜூலை 1 முதல் காசோலை வழியே சொத்து வரி வசூலிப்பதில்லை' என, எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.
டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திருத்தச் சட்டம், 2003ன் பிரிவு 114ன்படி, டில்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களும் காலி நிலங்களும் சொத்து வரி செலுத்த வேண்டும்.
இதுவரை வரைவோலை, காசோலை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சொத்து வரியை மாநகராட்சி வசூலித்து வந்தது. காசோலையை பொறுத்தவரையில், பணமின்றி திரும்புதல், காலாவதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மாநகராட்சி அதிகாரிகள் சந்தித்து வந்தனர்.
இந்த சிக்கல்களை தவிர்க்கும் வகையில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் காசோலைகள் வழியாக சொத்து வரி வசூலிப்பதில்லை என, டில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
எனவே, அடுத்த மாதம் முதல், சொத்து வரியை யு.பி.ஐ., வாலட்கள், வரைவோலை, பே ஆர்டர் அல்லது ஏதேனும் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்த வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2024-25ம் ஆண்டிற்கான வரியை வரும் 30ம் தேதிக்குள் முந்தைய நிலுவைகளை செலுத்தினால், 10 சதவீத தள்ளுபடியை சொத்து உரிமையாளர்கள் பெற்று பயனடையும்படி, மாநகராட்சி அறிவித்துள்ளது.