14 வயது சிறுவனுக்கு 'நிபா' வைரஸ்; கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
14 வயது சிறுவனுக்கு 'நிபா' வைரஸ்; கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
14 வயது சிறுவனுக்கு 'நிபா' வைரஸ்; கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : ஜூலை 20, 2024 11:41 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் 'நிபா' வைரஸ் தொற்றால் 14 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நிபா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை, மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 14 வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அண்டை மாவட்டமான கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்புகள் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
வவ்வால்களின் எச்சத்தால் ஏற்படும் இவ்வகை தொற்றால், கேரளாவில் 2018, 2021, 2023ம் ஆண்டுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில், அந்தச் சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.
இதையடுத்து, நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சிறுவனைத் தொடர்ந்து, மலப்புரம் மாவட்டத்தில் வேறு யாரேனும் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மாநில சுகாதாரத்துறை செயலர், தேசிய சுகாதார திட்டத்தின் மாநில இயக்குனர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் கலெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.