ADDED : ஜூலை 17, 2024 11:20 PM

பெங்களூரு நகரவாசிகளுக்கு வார இறுதி நாட்கள் பொழுது போக்க மால்கள், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள் இருந்தாலும் நீர்நிலைகளுக்கு சென்று பொழுது போக்குவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால், பெங்களூரில் கடல், அணைகள் இல்லை. ஏரிகள் மட்டும் உள்ளன.
ஆனால், பெங்களூரை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஏராளமான சிறிய அணைகள், தடுப்பணைகள் அதிகம் உள்ளன. இதனால் பெங்களூரு நகரவாசிகள் அங்கு சென்று பொழுது போக்கி வருகின்றனர்.
இந்நிலையில் குடும்பத்தினருடன் பொழுதுபோக்க நினைக்கும் பெங்களூரு நகரவாசிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது முனி நகர் அணை.
பெங்களூரில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் உள்ளது ராகிஹள்ளி கிராமம். இந்த கிராமம் பன்னரகட்டா வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்டு வருகிறது.
இந்த கிராமத்தில் தான் முனிநகர் அணை உள்ளது. ராகிஹள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் தேவையை இந்த அணை பூர்த்தி செய்து வருகிறது.
பெங்களூரில் இருந்து இந்த அணைக்கு பல கிராமங்களை தாண்டி செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது கிராம மக்களின் வாழ்க்கை முறையை கண்டு ரசிக்கலாம்.
இந்த அணைக்கு பெரிய அளவில் கூட்டம் வராது என்பதால், இங்கு செல்லும் சுற்றுலா பயணியர் எந்த அவசரமும் இன்றி பொறுமையாக அணையை சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.
அணையில் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பொழுதை கழிக்கலாம். ஆனால், அணைக்கு செல்லும் வழியில் பெரிய ஹோட்டல்கள் கிடையாது. இதனால் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வது நல்லது.
பெங்களூரு நகரில் இருந்து இந்த அணை 60 கி.மீ.,யில் உள்ளது. பைக், காரில் சென்றால் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத்திற்குள் சென்று விடலாம். குடும்பத்தினருடன் அரை நாள் பொழுது போக்க இந்த இடம் மிகவும் ஏற்றது.
- -நமது நிருபர் --