ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை ரேடியோ நிகழ்ச்சியில் மோடி பாராட்டு
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை ரேடியோ நிகழ்ச்சியில் மோடி பாராட்டு
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை ரேடியோ நிகழ்ச்சியில் மோடி பாராட்டு
ADDED : ஜூலை 01, 2024 12:32 AM

புதுடில்லி: நான்கு மாத இடைவெளிக்குப் பின், 'மன் கி பாத்' எனப்படும் ரேடியோ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கியுள்ளார். லோக்சபா தேர்தலில் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காக மக்களுக்கும், அதை சிறப்பாக நடத்தியதற்காக தேர்தல் கமிஷனையும் அவர் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
லோக்சபா தேர்தலையொட்டி, பிப்ரவரியில் இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரான பின், நேற்று தன் ரேடியோ நிகழ்ச்சியை அவர் மீண்டும் துவக்கினார்.
நேற்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையை நாம் சந்தித்துள்ளோம். இதில், 65 கோடி மக்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக, நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக முறையில் தங்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜனநாயக நடைமுறையில் பங்கேற்றதற்காக வாக்காளர்களுக்கும், தேர்தலை மிகச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக தேர்தல் கமிஷனுக்கும் பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த மாதத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளன. இதில் பங்கேற்கும் நம் வீரர்கள் - வீராங்கனையரை ஊக்குவிப்போம். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நம் வீரர்கள் - வீராங்கனையர் அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. தற்போது அதைவிட பெரிய வெற்றிகளை நாம் எதிர்பார்க்கலாம்.
தற்போதைய ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நம் வீரர்கள் - வீராங்கனையர், தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக, அவர்கள் ஒட்டுமொத்தமாக, 900க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.
தாய்நாடு மற்றும் தாய் மீது அன்பு மற்றும் மரியாதை இல்லாதவர்கள் இருக்க முடியாது. தாயின் நினைவாக அல்லது அவரை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொருவரும் ஒரு மரத்தை நட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதற்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தாயை கவுரவிப்பதுடன், தாய் மண்ணையும் நாம் பாதுகாக்க இது உதவும்.
இந்த நேரத்தில் நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்துக்கு உலகெங்கும் அங்கீகாரம் கிடைத்து வருவது, இந்தியராக ஒவ்வொரு வரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும். குவைத் வானொலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரைமணி நேரத்துக்கு, ஹிந்தியில் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. இதில், நம் கலாசாரம், பாரம்பரியத்தின் பெருமைகள் விளக்கப்படுகின்றன.
இதுபோல, துர்க்மேனிஸ்தான், சுரினாம், செயின்ட் வின்சன்ட் அண்ட் கிரனாடைன்ஸ் உட்பட பல நாடுகளில், நம் நாட்டின் பெருமைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி, உலகெங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
நம் வானொலியில் சமஸ்கிருத செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது, நம் நாட்டின் புராதன மொழியை கவுரவிப்பதுடன், நம் நாட்டின் அறிவுத் திறன்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த மொழியை ஊக்குவிக்க, பெங்களூரில் உள்ள ஒரு பூங்காவில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இது, நமக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.