விளையாட்டில் தவறான தீர்ப்பு? நடுவர்களை தாக்கிய இளைஞர்கள்!
விளையாட்டில் தவறான தீர்ப்பு? நடுவர்களை தாக்கிய இளைஞர்கள்!
விளையாட்டில் தவறான தீர்ப்பு? நடுவர்களை தாக்கிய இளைஞர்கள்!
ADDED : ஜூலை 24, 2024 11:42 PM

பெங்களூரு, : பெங்களூரு கொத்தனுாரில் நடந்த, 'கோ கோ' விளையாட்டு போட்டியில் தவறான முடிவு அறிவித்த நடுவர்களை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, கொத்தனுாரின் பிலிசிவாலேயில், அரசு பள்ளி மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் நேற்று முன்தினம் கோகோ விளையாட்டு போட்டி நடந்தது.
இப்போட்டியை காண, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.
ஆட்டத்தின் போது, ஒரு அணிக்கு எதிராக நடுவர்கள் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அணிக்கு ஆதரவாக கோபமடைந்த இளைஞர்கள் சிலர், கையில், கத்தி, கிரிக்கெட் ஸ்டம்ப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மைதானத்துக்குள் நுழைந்தனர்.
தீர்ப்பு வழங்கிய நடுவர்களை, மாணவ - மாணவியர் முன்னிலையில் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக, கொத்தனுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் நடுவர்களை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் அனைத்தும், அங்கிருந்தவர்களால், மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டது.
படுகாயம் அடைந்த நடுவர்களில் ஒருவரான சுலைமான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சுதீப், பவன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கையில் கத்தி, கிரிக்கெட் ஸ்டெம்புடன் மைதானத்துக்குள் ஆவேசமாக நுழைந்த இளைஞர்கள். இடம்: கொத்தனுார், பெங்களூரு.