ரயில் விபத்தை சாமர்த்தியமாக தவிர்த்த டிரைவர்களுக்கு பரிசு
ரயில் விபத்தை சாமர்த்தியமாக தவிர்த்த டிரைவர்களுக்கு பரிசு
ரயில் விபத்தை சாமர்த்தியமாக தவிர்த்த டிரைவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 24, 2024 11:44 PM
உடுப்பி : தண்டவாளத்தில் பெரிய மரம் விழுந்து கிடந்ததை கவனித்து, அவசர பிரேக் போட்டு ரயிலை நிறுத்திய லோகோ பைலட், உதவி லோகோ பைலட்டுக்கு தலா 15,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
மும்பையின் லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து, மங்களூருக்கு மத்தியஸ்கந்தா எக்ஸ்பிரஸ் ரயில் - 12619 தினமும் இயக்கப்படுகிறது.
உடுப்பி பயணம்
நேற்று முன்தினம் மாலை 3:20 மணிக்கு லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், நேற்று காலை 8:00 மணிக்கு உடுப்பி மாவட்டம், பர்கூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து புறப்பட்ட ரயில் உடுப்பி நோக்கி சென்றது.
பர்கூர் -- உடுப்பி ரயில் பாதையில் தண்டவாளத்தில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்தது.
இதை தூரத்தில் இருந்து லோகோ பைலட் புருஷோத்தம், உதவி லோகோ பைலட் மஞ்சுநாத் நாயக் கவனித்தனர்.
உடனடியாக அவசர பிரேக்கை போட்டனர். இதையடுத்து மெதுவாக சென்ற ரயில், மரம் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து சில அடி துாரத்திற்கு முன் நின்றது.
தண்டவாளத்தில் மரம் விழுந்து கிடப்பது பற்றி, உடுப்பி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
இது குறித்து, கொங்கன் ரயில்வே தலைமை பொது மேலாளர் சந்தோஷ்குமார் ஜா வுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
புத்திசாலித்தனமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி பயணியர் உயிரை காப்பாற்றியதற்காக, லோகோ பைலட், உதவி லோகோ பைலட்டை பாராட்டி தலா 15,000 ரூபாய் ரொக்க பரிசு அறிவித்தார்.
ரூ.15,000
தண்டவாளத்தில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டதும் ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
சுரத்கல் ரயில் நிலையத்திற்கு ரயில் சென்றதும், லோகோ பைலட், உதவி லோகோ பைலட்டிற்கு தலா 15,000 ரூபாய் ரொக்க பரிசை, தலைமை லோகோ இன்ஸ்பெக்டர் பினு வழங்கி பாராட்டினார்.