ரூ.3,773 கோடி விடுவிக்க அரசுக்கு அமைச்சர் கடிதம்
ரூ.3,773 கோடி விடுவிக்க அரசுக்கு அமைச்சர் கடிதம்
ரூ.3,773 கோடி விடுவிக்க அரசுக்கு அமைச்சர் கடிதம்
ADDED : ஜூன் 28, 2024 11:13 PM

பெங்களூரு: 'போக்குவரத்து கழகங்களுக்கு 3,773 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக அரசு சக்தி திட்டம் என்ற பெயரில், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண் பயணியர் மட்டும் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதால், அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதை அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் தலைமை செயலர் ரஜ்னிஷ் கோயலுக்கு, நான்கு பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக, போக்குவரத்து கழகங்களில் செலவு அதிகரித்துள்ளது. இருப்பினும் 2020 முதல் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2023- - 2024ம் ஆண்டில், நான்கு போக்குவரத்து கழகங்களில் இருந்து கிடைத்த வருமானத்தில் 47 சதவீதம் சக்தி திட்டத்தில் இருந்து வந்தது.
ஆனால் சக்தி திட்டத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை முழுமையாக, போக்குவரத்து கழகங்களுக்கு செலுத்தவில்லை. போக்குவரத்து கழகங்களுக்கு அரசு 3,773 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. அந்த பணத்தை விடுவிக்க வேண்டும்.
கடந்த 2023- - 2024ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய பஸ்களை வாங்குவதற்கு, அரசு 600 கோடி ரூபாய் விடுவித்தது. ஆனால் நடப்பாண்டு பட்ஜெட்டில் நிதி வழங்கப்படவில்லை.
ஊழியர்களின் சம்பளம், பஸ்களின் இயக்கத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் இதர செலவுகள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்த வேண்டிய தொகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023ம் ஆண்டு ஊதிய திருத்தத்தின்படி, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகையை செலுத்த முடியாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.