தன்னந்தனியே அமைச்சர் ஜார்ஜ் அசடு வழிந்த மது பங்காரப்பா
தன்னந்தனியே அமைச்சர் ஜார்ஜ் அசடு வழிந்த மது பங்காரப்பா
தன்னந்தனியே அமைச்சர் ஜார்ஜ் அசடு வழிந்த மது பங்காரப்பா
ADDED : மார் 14, 2025 06:59 AM
சட்டசபை நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது முதல் மதியம் 12:30 மணி வரை, ஆளுங்கட்சியின் முதல் வரிசையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட எந்த மூத்த அமைச்சரும் இல்லை. மின்சார அமைச்சர் ஜார்ஜ் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.
பெலகாவி அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர் அருகருகே அமர்ந்து, ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டு இருந்தனர். இதுபோல எதிரெதிர் துருவங்களான சதீஷ் ஜார்கிஹோளியும், காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமண் சவதியும் கூட நேற்று சிரித்து பேசிக் கொண்டனர்.
சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் பிரசாத், தன் தொகுதியில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டி நிதி குறித்துப் பேசினார். அவர் பேச ஆரம்பித்தபோது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அங்கு இல்லை. திடீரென வந்து தன் இடத்தில் அமர்ந்தார். கணேஷ் பிரசாத் என்ன பேசினார் என்றே அவருக்கு தெரியவில்லை. “பதிலளியுங்கள்,” என, சபாநாயகர் காதர் கூறியபோது, “எம்.எல்.ஏ.,விடம் அவரது கோரிக்கை பற்றி கூட்டம் நடத்துகிறேன்,” என்று கூறி சமாளித்தார் அமைச்சர்.
குனிகல் காங்கிரஸ் உறுப்பினர் ரங்கநாத் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில், அமருவதை பார்ப்பது அரிதான விஷயம். ஆளுங்கட்சி வரிசையில் முதல்வர், துணை முதல்வர் இருக்கையை தவிர, அனைத்து இருக்கைக்கு சென்றும் அமர்ந்து கொள்வார். விவாதம் நடக்கும்போது, நமக்கு என்ன என்பது மாதிரி அங்கும், இங்கும் நடந்து கொண்டே இருப்பார். இதை கவனிக்கும் சபாநாயகர் காதர், “ரங்கநாத்... ரங்கநாத்... உங்கள் இடத்தில் சென்று அமருங்கள்,” என்று தினமும் கூறுகிறார். நேற்றும் இதே தான் நடந்தது.
அமைச்சர் பிரியங்க் கார்கேயுடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் சரத் பச்சேகவுடா, பிரதீப் ஈஸ்வர், ரிஸ்வான் அர்ஷத் நீண்ட நேரமாக ஏதோ சிரித்து பேசிக்கொண்டே இருந்தனர்.