மேம்பால பணிகளில் கர்நாடகா மெத்தனம்
மேம்பால பணிகளில் கர்நாடகா மெத்தனம்
மேம்பால பணிகளில் கர்நாடகா மெத்தனம்
ADDED : மார் 14, 2025 06:53 AM

'ஹூப்பள்ளி மேம்பாலப் பணிகளை முடிப்பதில் மாநில அரசு மெத்தனமாக உள்ளது,'' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காட்டமாக கூறினார்.
தார்வாட், ஹூப்பள்ளியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை தவிர்ப்பதற்காக, 2021ல், கிட்டூர் ராணி சென்னம்மா வட்டம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன.
மொத்தம் 3.61 கி.மீ., துாரம், தேசிய நெடுஞ்சாலைகள் 63, 4, 218 ஆகியவற்றை இணைக்கும் வழியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு 2020 ஆகஸ்ட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021 ஜூனில் பணிகள் துவங்கப்பட்டன. 2024 மார்ச் 20க்குள் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையிலும், 50 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.
இதற்கு நிலம் கையகப்படுத்துதலிலும், மாற்றுப் பாதை அமைப்பதிலும் தாமதம் போன்ற பல சிக்கல்கள் இருந்துள்ளன. இதனால், பாதி வேலைகள் முடியாமல் உள்ளன.
இதுகுறித்து நேற்று முன்தினம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தார்வாட் எம்.பி.,யும், மத்திய உணவுத்துறை அமைச்சருமான பிரஹலாத் ஜோஷி முன்னிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் டில்லியில் இருந்தவாறே காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தார்வாட் கலெக்டர் திவ்யா பிரபு, ஹுப்பள்ளி -- தார்வாட் போலீஸ் கமிஷனர் என்.சசிகுமார், மாநகராட்சி கமிஷனர் ருத்ரேஷ் கலி, பொதுப்பணித்துறை செயலர், தேசிய சுகாதாரப் பணியக தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிதின் கட்கரி கூறியதாவது:
மத்திய அரசு, தேவையான அளவு நிதியை வழங்கிய போதிலும், பாதி பணிகள் கூட முடிந்தபாடில்லை. மாநில அரசின் மெத்தனமே காரணம். நிலம் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு மெத்தனமாக உள்ளது.
மொத்த திட்டத்தின் செலவு 298 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. பின், பிரஹலாத் ஜோஷியின் வற்புறுத்தலின் பேரில், கூடுதலாக 51.49 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறேன்.
தற்போது திட்டத்தின் மொத்த செலவு 349.49 கோடி ரூபாய். மாநிலத்தில் அரசு நிதி தொடர்பாக சிக்கல்களை எதிர்கொண்டால், மேம்பாலப் பணிகள் செய்வதற்கு சிறப்பு நிதி வழங்கப்படும்.
அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் உரிய நேரத்தில் தங்கள் பணிகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.