நீண்ட காலத்துக்கு வெப்ப அலை வானிலை மையம் எச்சரிக்கை
நீண்ட காலத்துக்கு வெப்ப அலை வானிலை மையம் எச்சரிக்கை
நீண்ட காலத்துக்கு வெப்ப அலை வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : ஜூன் 11, 2024 01:38 AM
புதுடில்லி, “இந்தாண்டு கோடையில்தான், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட நாள்களுக்கு வெப்ப அலை வீசியது. வருங்காலங்களில் இந்த நிலை தொடரும் அல்லது மேலும் தீவிரமாகும்,” என, இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபாத்ரா கூறினார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
இந்தஆண்டு கோடை வெயில் மிகவும் தீவிரமாக இருந்தது. மே மாதத்தின் நடுப்பகுதியில் துவங்கிய வெப்ப அலை, 24 நாட்களுக்கு மேலாக நாட்டின் பல பகுதிகளிலும் நிலவியது.
இந்த ஆண்டில் வட மாநிலங்களில், 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உயர்ந்தது. நம் நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு வெப்ப அலை நீண்ட காலம் நிலவியது.
தற்போது பருவமழை காலம் துவங்கியுள்ளதால், அடுத்த சில நாட்களில் வட மாநிலங்களிலும் வெப்பநிலை குறையும்.
அதே நேரத்தில், இதுபோன்ற நீண்ட நாட்களுக்கு வெப்ப அலை என்பது வருங்காலங்களில் தொடரும் அல்லது மேலும் தீவிரமாகும். பருவநிலை மாறுபாடு பிரச்னைகளுக்கு உரிய தீர்வை காணாவிட்டால், பெரும் பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.
வெப்ப அலை அதிகரிப்பால், மின்சார தேவை அதிகமாகிறது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், தீவிர பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.
மனித நடவடிக்கைகள், மக்கள்தொகை, தொழில்மயம், போக்குவரத்து போன்றவை அதிகரிப்பால், நாம் காற்றை மாசுபடுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் நாம் நம்மை மட்டுமல்ல, நம் எதிர்கால சந்ததியினரையும் ஆபத்தில் தள்ளுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.