இன்னும் 4 நாட்களுக்கு மழை கொட்டும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இன்னும் 4 நாட்களுக்கு மழை கொட்டும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இன்னும் 4 நாட்களுக்கு மழை கொட்டும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு
ADDED : ஜூன் 29, 2024 10:17 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் அடுத்த சில நாட்கள் கனமழை கொட்டும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், நான்கு நாட்களுக்கு 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
டில்லி மற்றும் அண்டை மாநிலங்களாகன் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை 2:30 மணியில் இருந்து 5:30 மணி வரை டில்லி மற்றும் புறநகரில் வரலாறு காணாத கொட்டித் தீர்த்தது. அதேபோல அண்டை மாநிலங்களிலும் கனமழை பெய்தது.
டில்லியில் நேற்று முன் தினம் மட்டும் 22.81 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்றும் இடைவிடாமல் மழை பெய்தது.
கடும் வெப்பத்தாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் தவித்துக் கொண்டிருந்த டில்லிவாசிகள் மழையை வரவேற்றுக் கொண்டாடினர். சிறுவர் - சிறுமியர் மட்டுமின்றி பெரியவர்களும் மழையில் நனைந்தவாறே நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், டில்லியில் இன்று கனமழையும், நாளை மிக அதிக கனமழையும் கொட்டும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரோகினி, புராரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை கொட்டியது. வெப்பநிலை நேற்று குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்ஷியஸ், அதிகபட்சமாக 32 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் நேற்று காலை 8:30 மணிக்கு 80 சதவீதமாக இருந்தது.
காற்றின் தரக் குறியீடு காலை 9:00 மணிக்கு 108ஆக இருந்தது. இது மிதமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ வாசல் திறப்பு
நேற்று முன்தினம் கொட்டிய கனமழையால் யஷோபூமி துவாரகா 25வது செக்டார் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. மழைநீர் வடிந்ததையடுத்து, இரண்டு வாயில்களும் நேற்று திறக்கப்பட்டன.
குவியும் புகார்கள்
தலைநகரில் பெய்து வரும் கனமழையால் டில்லிவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்து கிடக்கின்றன. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
சீலம்பூர், கிருஷ்ணா நகர் மற்றும் பட்லி ஆகிய பகுதிகளில் தண்ணீரை அகற்ற முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் தவிக்கின்றனர். மூல்சந்த் சுரங்கப்பாதை, ஜாகிரா, தவுலா குவான் தண்ணீரை வெளியேற்ற 5 மணி நேரமானது. மின்டோ சாலையில் தேங்கியிருந்த வெள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் 12 மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினர்.
மேலும், ராஜிந்தர் நகர், பழைய சப்ஜி மண்டி, ரஜோரி கார்டன் விரிவாக்கம், ஹவுஸ் காஸ், பிதம்புரா மற்றும் மாளவியா நகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
திரிலோக்புரி, பட்பர் கஞ்ச், வசந்த் விஹார் மற்றும் நந்த் நாக்ரி ஆகிய இடங்களில் ஏராளமான மரங்கள் சரிந்தன. மழைநீரால் நிரம்பியுள்ள பிரகதி மைதானம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
டில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, காங்கிரஸ் எம்.பி., சசிதரூர், மணீஷ் திவாரி மற்றும் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ் உட்பட பல எம்.பி.க்களின் பங்களாக்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
புதுடில்லி முனிசிபல் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்கா அவென்யூ சாலை, லக்ஷ்மிபாய் நகர், துக்ளக் சாலை, கோல்ப் லிங்க்ஸ், பாரதி நகர், கித்வாய் நகர், மந்திர் மார்க், கன்னாட் பிளேஸ் இ பிளாக் மற்றும் சரோஜினி நகர் சுரங்கப்பாதை ஆகிய இடங்களிலும் தேங்கியுள்ள வெள்ளம் இன்னும் வடியவில்லை. டில்லி அரசின் தலைமைச் செயலர் நரேஷ் குமார், கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து, வெள்ளத்தை அகற்றும் பணிகளை முடுக்கி விட்டார்.