மேகதாது அணை திட்டம்: பா.ஜ., - எம்.பி., திட்டவட்டம்
மேகதாது அணை திட்டம்: பா.ஜ., - எம்.பி., திட்டவட்டம்
மேகதாது அணை திட்டம்: பா.ஜ., - எம்.பி., திட்டவட்டம்
ADDED : ஜூன் 20, 2024 05:42 AM

பெங்களூரு: ''மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற, மாநில அரசுடன் இணைந்து செயல்படுவோம்,'' என, பெங்களூரு ரூரல் பா.ஜ., -- எம்.பி., மஞ்சுநாத் கூறியுள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை இருந்தது. காங்கிரஸ் வேட்பாளரை விட 50,000 முதல் ஒரு லட்சம் ஓட்டுகள், கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பார்ப்பையும் மீறி 2.69 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
இந்த சாதனை வெற்றியை மக்கள் எனக்கு பரிசாக அளித்தனர். மருத்துவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான், அரசியலில் நுழைந்ததும் மக்களின் அன்பால் ஈர்க்கப்பட்டுள்ளேன்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. பெங்களூரு ரூரல் தொகுதியில் மாற்றம் தேவைப்பட்டதால், கட்சி சார்பற்ற வாக்குகள் ஒருங்கிணைந்தன. மக்கள் மனது வைத்தால் மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு சாட்சி.
அரசியல் செய்வது தேர்தல் நேரத்தில் மட்டுமே. எம்.பி., என்ற முறையில் தொகுதியின் வளர்ச்சிக்காக, மத்திய அரசிடம் இருந்து பல திட்டங்களை கொண்டு வருவேன்.
ராம்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவு அமைக்க முயற்சி எடுப்பேன். தாலுகா அரசு மருத்துவமனைகளில் உள்ள, அவசர சிகிச்சை பிரிவை மேலும் மேம்படுத்துவேன்.
பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது அவசியம். இந்தத் திட்டத்திற்காக அரசுடன் இணைந்து செயல்படுவோம். மத்திய அரசிடம் அனுமதி வாங்க முயற்சி செய்வோம்.
பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மருத்துவத்துறையில் நான் ஆற்றிய சேவையை வைத்து நான் வெற்றி பெற்றால், மத்திய சுகாதார அமைச்சர் ஆவேன் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை. தேசிய அளவில் நான் பணியாற்ற கட்சி தலைவர்கள் அனுமதித்தால் அதை செய்வேன். இல்லையென்றால் எம்.பி., என்ற முறையில் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.