துஷ்ட சக்திகளை விரட்டு ம் மாசானிகம்மா
துஷ்ட சக்திகளை விரட்டு ம் மாசானிகம்மா
துஷ்ட சக்திகளை விரட்டு ம் மாசானிகம்மா
ADDED : ஜூலை 23, 2024 05:58 AM

தங்களுக்கு எதிரான துஷ்ட சக்திகளை விரட்ட மாண்டியா, ஹாசன், துமகூரு, குடகு உட்பட பல மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு ஆபத்பாந்தவனாக திகழ்கிறார் மாசானிகம்மா.
மைசூரு மாவட்டம், பிரியாபட்டணாவில் அமைந்துள்ளது ஸ்ரீமாசானிகம்மா கோவில். இங்கு அருள்புரியும் மாசானிகம்மா, உஜ்ஜயினி மன்னரின் ஏழு மகள்களில், மூத்த மகள் என்றும்; சாமுண்டீஸ்வரி இளைய மகள் என்றும் பிரியாபட்டணா மக்கள் நம்புகின்றனர்.
இவரை, இஷ்ட தெய்வமாகவும், குல தெய்வமாகவும், உரி மாசானியாகவும், குடவர்கள் மம்மாயி அம்மனாகவும் நினைத்து பூஜிக்கின்றனர்.
இவரை குலதெய்வமாக உஜ்ஜயினி ராஜாவும் வழிபட்டார். மாசானிகம்மாவை தரிசிக்க, துமகூரு, ஹாசன், மாண்டியா, மைசூரு, குடகு உட்பட பல மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
மாசானிகம்மாவை தரிசிப்பதன் மூலம், தங்களுக்கு எதிரான துஷ்ட சக்திகள் விலகும் என்று நம்புகின்றனர்.
சுண்ணாம்பு கல்
மீனவர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் மாசானிகம்மாவை வழிபடுகின்றனர்.
முன்னொரு காலத்தில், சத்யநாராயணா என்பவரின் குடும்பத்தினர் யாரும், கடவுளை வணங்கியதில்லை. ஆனால், அவரது மகள் மட்டும், தந்தைக்கு தெரியாமல் கடவுளை வணங்கி வந்தார்.
இதை ஒரு நாள் கவனித்த சத்யநாராயணா, மகளை விரட்டினார்.
இதனால், மகள் கொதிக்கும் சுண்ணாம்பில் குதித்து இறந்து போனார். சில நாட்களுக்கு பின், கொதிக்கும் சுண்ணாம்பு கல்லில் இருந்து சிலை ஒன்று கிடைத்தது.
அதற்கு, 'உரிமாசானி' என்று பெயரிட்டு, கிராம தேவதையாக மக்கள் வழிபட துவங்கினர். உரிமாசானிக்காக கோவில் கட்டினர்.
முன்னொரு காலத்தில் போரில் சோழ மன்னரால் வீழ்த்தப்பட்ட செங்கல்வராஜாவும், அவரது படை வீரர்களும் கைது செய்யப்பட்டு இவ்வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு நேரமானதால், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ராஜா கனவில்
அப்போது செங்கல்வ ராஜாவின் கனவில் தோன்றிய மாசானிகம்மா, 'எனக்கு இவ்விடத்தில் கோவில் கட்டி, குல தெய்வமாக வழிபட்டால், இந்த கைதில் இருந்து விடுவிப்பேன்' என கூறினார். ராஜாவும், கோவில் கட்டுவதாக உறுதியளித்தார்.
திடீரென அலறல் சத்தம் கேட்டு விழித்த ராஜா, சிங்கம் ஒன்று இருப்பதை பார்த்தார். இதை பார்த்த சோழ மன்னரின் படை வீரர்கள், சிதறி ஓடினர். சிங்கமும் அங்கிருந்து மறைந்தது. இதனால் செங்கல்வ ராஜாவும், அவரது படை வீரர்களும் தப்பினர்.
அவர் கொடுத்த வாக்குறுதிப்படி, கோட்டையை கட்டிய செங்கல்வராஜா, அதற்கு, 'சிம்ஹபட்டினா' என்று பெயரிட்டார். அதுவே பிரியாபட்டணா என பெயர் மாறியது.
செங்கல்வ ராஜாவை மீட்ட சிங்கம், ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதை மிருகேசவர்மா என்றும் அழைக்கின்றனர். நாட்டுப்புற கதைகளில் மாசானிகம்மாவை, 'யுத்த தேவதை' என்றும் அழைக்கின்றனர்.
� மாசானிகம்மா கோவில். � சிறப்பு அலங்காரத்தில் மாசானிகம்மா.
- நமது நிருபர் -