¥'ஊழல் செய்வதில் உள்ஒப்பந்தம்' காங்., - பா.ஜ., மீது ஈஸ்வரப்பா 'திடுக்'
¥'ஊழல் செய்வதில் உள்ஒப்பந்தம்' காங்., - பா.ஜ., மீது ஈஸ்வரப்பா 'திடுக்'
¥'ஊழல் செய்வதில் உள்ஒப்பந்தம்' காங்., - பா.ஜ., மீது ஈஸ்வரப்பா 'திடுக்'
ADDED : ஜூலை 23, 2024 05:59 AM

பாகல்கோட்: ''கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, ஊழல் அரசாக மாறியுள்ளது. ஊழல் செய்வதில் காங்., - பா.ஜ., உள் ஒப்பந்தம் செய்துள்ளன,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் கூறியதாவது:
மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா மீது நேரடியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் இருந்து தப்பும் நோக்கில், முந்தைய பா.ஜ., அரசின் 21 ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
சந்தேகம்
விவசாயிகளின் வரிப்பணம், தவறாக பயன்படுத்தப்படுவதாக, மாநில மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்பு பா.ஜ., அரசில் ஊழல் நடந்துள்ளது.
இவற்றை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என, சித்தராமையா கூறி வந்தார். இப்போது பா.ஜ., தலைவர்கள், காங்கிரஸ் அரசில் ஊழல் நடந்துள்ளது என, குற்றம் சாட்டுகின்றனர்.
இரண்டு கட்சிகளின் தலைவர்களும் விசாரணை நடத்த வேண்டும் என, கூறுகின்றனரே தவிர, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க ஏன் தயங்குகின்றனர் என்பது தெரியவில்லை.
பா.ஜ., மற்றும் காங்., அரசுகளில் நடந்துள்ள முறைகேடுகளையும், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். விசாரணை நடந்தால் யார் ஊழல்வாதிகள் என்பது, நாட்டு மக்களுக்கு தெரியும்.
கொள்ளை
இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டினால், தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியாமல் போய்விடும். ஒருவரை ஒருவர் விமர்சிக்கின்றனர்.
ஒருவருக்கு ஒருவர் உள் ஒப்பந்தம் செய்து கொண்டு கொள்ளை அடிக்கின்றனர்.
கர்நாடகாவில் பா.ஜ., காங்கிரஸ் உள் ஒப்பந்த அரசியல் செய்கின்றனர். ஷிகாரிபுராவில் வெற்றி பெற, முதல்வர் சித்தராமையாவுடன் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள் ஒப்பந்தம் செய்து கொண்டார். பசனகவுடா பாட்டீல் எத்னால், பிரதாப் சிம்ஹா, சி.டி.ரவி கூறியது 100 க்கு 100 உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.