வங்கதேச பிரதமருடன் பேச அழைக்காததற்கு மம்தா வருத்தம்
வங்கதேச பிரதமருடன் பேச அழைக்காததற்கு மம்தா வருத்தம்
வங்கதேச பிரதமருடன் பேச அழைக்காததற்கு மம்தா வருத்தம்
ADDED : ஜூன் 24, 2024 11:20 PM

கோல்கட்டா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வருகையைத் தொடர்ந்து நடந்த இரு தரப்பு பேச்சின்போது, மேற்கு வங்கம் தொடர்பான விஷயங்கள் குறித்து தன்னிடம் எந்தக் கருத்தையும் கேட்காததற்கு, மத்திய அரசு மீது, முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக நம் நாட்டிற்கு வந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்கள் தொடர்பாக, மத்திய அரசு எந்தக் கருத்தையும் கேட்காததற்கு, மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்ருவா தடுப்பணை
இது குறித்து, திரிணமுல் காங்., மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:
வங்கதேச பிரதமரின் வருகையின்போது, சில முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்றான பக்ருவா தொடர்பான ஒப்பந்தம், வரும் 2026ல் முடிவடைய உள்ளது. இதை ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் தொடர்வது குறித்து இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.
இந்த ஒப்பந்தம், மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பக்ருவா தடுப்பணை என்பது, மேற்கு வங்கத்துக்கு மிகவும் முக்கியமாகும். கங்கை நதி இந்த வழியாகத்தான் வங்கதேசத்துக்குள் நுழைகிறது.
இந்த தடுப்பணை வழியாக ஹூக்ளி நதிக்கு தண்ணீர் மாற்றி விடப்படும். இது கோல்கட்டா துறைமுகம் மற்றும் கோல்கட்டா உட்பட ஹூக்ளி - பாகிரதி நதிக்கரையோர பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசின் கருத்தை கேட்டிருக்க வேண்டும்.
அதுபோல, 1996ல் செய்யப்பட்ட கங்கை நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக, கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, வங்கதேசத்தில் டீஸ்டா நதிப் பகுதியை பராமரிக்க மற்றும் நிர்வகிக்க உதவுவதற்காக, மத்திய அரசின் நிபுணர் குழுவை அனுப்பவும், அங்கு தடுப்பணைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள், மேற்கு வங்கத்துடன் நேரடி தொடர்பு உள்ளவை. ஆனால், இது தொடர்பாக, மாநில முதல்வரிடமோ, மாநில அரசுடனோ எந்த பேச்சையும் மத்திய அரசு நடத்தவில்லை. வங்கதேச பிரதமருடனான பேச்சின்போது, மேற்கு வங்கத்தையும் அழைத்திருக்க வேண்டும்.
ஒருதலைபட்சம்
இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுத உள்ளார். மேலும், பார்லிமென்டிலும் இது குறித்த பேச திட்டமிட்டுள்ளோம். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில், 'டீஸ்டா நதி விவகாரம், மேற்கு வங்க அரசுடன் தொடர்புடையது. இதில், மாநில அரசின் கருத்தை கேட்காமல், மத்திய அரசு செயல்பட்டிருப்பது, ஒருதலை பட்சமானது' என, தெரிவித்துள்ளார்.