Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ l தேர்தல் முடிவு வெளியானதும் காங்.,கில் வெடித்தது... l முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய தலைவலி

l தேர்தல் முடிவு வெளியானதும் காங்.,கில் வெடித்தது... l முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய தலைவலி

l தேர்தல் முடிவு வெளியானதும் காங்.,கில் வெடித்தது... l முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய தலைவலி

l தேர்தல் முடிவு வெளியானதும் காங்.,கில் வெடித்தது... l முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய தலைவலி

ADDED : ஜூன் 08, 2024 04:21 AM


Google News
Latest Tamil News
பெலகாவி : லோக்சபா தேர்தல் முடிவுகளை அடுத்து, காங்கிரசில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி - சிவகுமார் மற்றும் மகேந்திர தம்மண்ணவர் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இதில், சிவகுமார் ஒரு படி மேலே சென்று, 'சதீஷ் ஜார்கிஹோளியை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்' என காட்டமாக கூறியுள்ளார். இதனால், முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அரசியலையும், பெலகாவி மாவட்டத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. பெலகாவி அரசியலில் ரமேஷ், சதீஷ், பாலசந்திரா, லகன் என ஜார்கிஹோளி சகோதரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஜார்கிஹோளி சகோதரர்களில் ஒருவர் அமைச்சராக இருப்பார்.

இந்நிலையில் கடந்த 2013 முதல் 2018 வரை நடந்த, காங்கிரஸ் ஆட்சியில் ரமேஷ் ஜார்கிஹோளி சிறிய தொழில் அமைச்சராக இருந்தார். அப்போது பெலகாவி அரசியல் விவகாரத்தில், துணை முதல்வராக இருந்த சிவகுமார் தேவையின்றி தலையிட்டார். இதனால் இருவருக்கும் முட்டல், மோதல் ஏற்பட்டது. இருவரையும் முதல்வர் சித்தராமையா சமாதானப்படுத்தினார்.

* ஆட்சி கவிழ்ப்பு

இந்நிலையில் கடந்த 2018ல் அமைந்த, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியிலும் சிவகுமாரும், ரமேஷ் ஜார்கிஹோளியும் அமைச்சராக இருந்தனர். அப்போதும் பெலகாவி அரசியலில், சிவகுமார் தலையிட்டார். கோபம் அடைந்த ரமேஷ் ஜார்கிஹோளி தன்னுடன் 16 எம்.எல்.ஏ.,க்களை அழைத்து கொண்டு, பா.ஜ.,வுக்கு சென்று, கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டார்.

தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருக்கும் சிவகுமாருக்கும், ரமேஷ் ஜார்கிஹோளியின் தம்பியும், பொதுப்பணி துறை அமைச்சரான சதீஷ் ஜார்கிஹோளிக்கும், ஆட்சியின் துவக்கத்தில் இருந்தே பிரச்னை உள்ளது. பெலகாவி அரசியலில் பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை வளர்த்து விட சிவகுமார் நினைக்கிறார். இது சதீஷுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

* வாரிசு தொகுதிகள்

சிவகுமாரின் கொட்டத்தை அடக்க, கூடுதலாக மூன்று துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று, சதீஷ் கேட்டார். இதனால் சிவகுமார் கடுப்பானார். ஆனாலும் வெளியே காட்டவில்லை. அமைச்சரவை கூட்டங்களின் போது, சதீஷுடன் ஒற்றுமையாக இருப்பது போல, சிவகுமார் காட்டி கொண்டார். ஆனாலும், சதீஷ் பிடி கொடுக்கவில்லை.

இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பெலகாவி தொகுதியில் அமைச்சர் லட்சுமியின் மகன் மிருணாளும், சிக்கோடியில் சதீஷ் மகள் பிரியங்காவும் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். மிருணாளை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு சதீஷிடமும், பிரியங்காவை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு லட்சுமியிடமும் கொடுக்கப்பட்டது.

மிருணாள் வெற்றி பெற்றால், பெலகாவியில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று நினைத்த சதீஷ், மிருணாளை ஆதரித்து பெரிய அளவில் பிரசாரம் செய்யவில்லை. கடமைக்காக ஓரிரு நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரியங்காவுக்கு ஆதரவாக லட்சுமியும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இருவரும், தங்களது வாரிசுகளின் தொகுதிகளில் முகாமிட்டு வேலை செய்தனர்.

* 22,000 ஓட்டுகள்

லோக்சபா தேர்தல் முடிவுகளில், சிக்கோடியில் பிரியங்கா வெற்றி பெற்றார். ஆனால், பெலகாவியில் மிருணாள் தோற்றார். சதீஷ் பிரசாரம் செய்யாததால் தான், மிருணாள் தோற்றார் என்று, சிவகுமாருக்கு புகார் பறந்தது.

சிக்கோடியில் தன் மகள் பிரியங்கா வெற்றி பெற்றாலும், சதீஷ் ஜார்கிஹோளி சமாதானம் அடையவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குடச்சி மகேந்திர தம்மண்ணவர், அதானி லட்சுமண் சவதி மீது நேரடியாக குற்றச்சாட்டு கூறினார். இந்த இரு தொகுதியிலும் எதிர்பார்த்த அளவுக்கு, பிரியங்காவுக்கு ஓட்டு கிடைக்கவில்லை என்றார்.

இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., மகேந்திர தம்மண்ணவர், ''எனது தொகுதியில் காங்கிரசுக்கு 22,000 ஓட்டுகள் லீடு கிடைத்து உள்ளது. சட்டசபை தேர்தலில் சதீஷ் 57,000 ஓட்டுகள் முன்னிலை பெற்றார். ஆனால் லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் இருந்து 23,000 ஓட்டுகள் மட்டுமே லீடு கொடுத்து உள்ளார். அடுத்தவர்களை குறை சொல்லும் முன்பு, தனது தொகுதியின் நிலையை அவர் பார்க்க வேண்டும். தலித் தலைவர்கள் ஒடுக்கும் வேலையை அவர் செய்கிறார். நான் அரசியலில் வளர்வதே, அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை,'' என்றார்.

* மனநல மருத்துவமனை

இதற்கு பதிலடி தந்து, பெலகாவியில் சதீஷ் ஜார்கிஹோளி நேற்று கூறியதாவது:

மகேந்திர தம்மண்ணவருக்கு, சீட் கிடைக்க நானே காரணம். அவரை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லாவிட்டால், அவருக்கு சீட் பெற்றுக் கொடுத்திருப்பேனா? வேறு ஒருவருக்கு சீட் தரும்படி கூறியிருப்பேன். ஓட்டுப் பதிவுக்கு முன்பு, அவர் யாருடைய தொடர்பிலும் இல்லை.

லோக்சபா தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட, இவரது சம்பந்தி ஷம்பு கல்லோலிகருக்கு ஆதரவாக செயல்பட்டார். இவருக்கு குடச்சியில் 3,400 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதுதான் மகேந்திராவின் சக்தி. நான் எந்த தலைவரையும் மிதிக்க முயற்சிக்கவில்லை. கட்சியிலேயே இருந்து கொண்டு, மற்றவருக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், 'லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் குறைவான இடங்களில் வெற்றி பெற்றதற்கு துணை முதல்வர் சிவகுமார் தான் காரணம்' என்று, சதீஷ் குற்றச்சாட்டு கூறி இருந்தார். 'தயாரிப்பாளர், இயக்குனர் ஒற்றுமையாக இருந்தால் தான், திரைப்படம் வெற்றி பெறும்' என்றும் கூறினார்.

இதுகுறித்து பெலகாவியில் துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டியில், ''அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை, மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர் அனைத்தையும் பேசுகிறேன்,'' என காட்டமாக கூறினார்.

* ஏக்நாத் ஷிண்டே

மகேந்திர தம்மண்ணவரும், லட்சுமண் சவதியும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் ஆவர். தனது ஆதரவாளர்களை விமர்சித்து பேசியதால் கோபம் அடைந்த சிவகுமார், சதீஷை சாடி உள்ளார்.

லோக்சபா தேர்தல் முடிந்த பின், கட்சியில் வெடித்துள்ள உட்கட்சி பூசல், முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், காங்கிரஸ் தோற்றதால் அவர் கவலையில் உள்ளார்.

கர்நாடகாவின் ஏக்நாத் ஷிண்டே என்று சதீஷை, பா.ஜ.,வினர் அடிக்கடி கூறி வருகின்றனர். சிவகுமாருடன் ஏற்பட்ட மோதல் முற்றினால், ஏக்நாத் ஷிண்டேயாக சதீஷ் மாறவும் வாய்ப்பு உள்ளது. இவர்களது மோதலை எப்படி சரி செய்வது என தெரியாமல், சித்தராமையா தவித்து வருகிறார்.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us