தங்கவயல் தனியார் பள்ளியில் முறைகேடு கோலார் மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை
தங்கவயல் தனியார் பள்ளியில் முறைகேடு கோலார் மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை
தங்கவயல் தனியார் பள்ளியில் முறைகேடு கோலார் மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை
ADDED : ஜூன் 01, 2024 04:37 AM

தங்கவயல் தங்கவயல் பள்ளிகளில் நடந்து வரும் முறைகேடுகள் குறித்து, கோலார் மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ண மூர்த்தி நேற்று நேரில் விசாரித்தார்.
கோலார் மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ண மூர்த்தி நேற்று பிற்பகல், ராபர்ட்சன்பேட்டை வட்டார கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு வருகை தந்தார். வட்டார கல்வி அதிகாரி முனிவெங்கட ராமாச்சாரியுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
இதன் பின்னர், ராபர்ட்சன்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய - ஆசிரியைகளுடன் பேசினார்.
மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், ''மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க செய்ய வேண்டும். ஆஜர் பட்டியலை கவனிக்க வேண்டும்.
மாணவியருக்கு பாதுகாப்பு மிக முக்கியம். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீசார் ரோந்து வருவதற்கு கடிதம் அனுப்ப வேண்டும்,'' என்றார்.
இதனை அடுத்து, ராபர்ட்சன் பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மீதான புகார்கள் குறித்து விசாரிக்க சென்றார். அங்கு காத்திருந்த பலரிடம் பேசினார்.
அவர்கள் கூறுகையில், 'பள்ளி நடத்த அனுமதி வாங்கி இருப்பது ஓரிடம்; வகுப்புகள் நடப்பது இன்னொரு இடம். விளையாட்டு மைதானம் இல்லாததால், பூங்காவில், மாணவர்களை விளையாட வைக்கின்றனர். இதனால், பாதிப்பு ஏற்படும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கழிப்பறை வசதிகள் இல்லை. பள்ளியில் பாடநுால், சீருடைகள் விற்பனை செய்து, கல்வி நிறுவனத்தை வியாபார நிலையமாக மாற்றி உள்ளனர்' என்றனர்.
இதற்கு பதில் அளித்த கல்வி அதிகாரி கிருஷ்ண மூர்த்தி, ''அரசு விதிகளை பள்ளி நிர்வாகம் மீறக் கூடாது. நோட்டு புத்தகம், சீருடைகள் விற்பனை செய்ய கூடாது.
''இதுகுறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தருமாறு வட்டார கல்வி அதிகாரி முனிவெங்கடராமாச்சாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் கல்வி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்,'' என்றார்.