ADDED : ஜூலை 10, 2024 05:17 AM

பெங்களூரு, : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 87 கோடி ரூபாய் முறைகேடு நடந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் நாகேந்திராவிடம், சி.ஐ.டி., போலீசார் நேற்று 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு வளர்ச்சி ஆணையத்தில் முறைகேடு நடப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அந்த ஆணையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய சந்திரசேகர், 52, என்பவர், மே 27ம் தேதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால், பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த நாகேந்திரா ராஜினாமா செய்தார்.
வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி., வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணம் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை கண்டுபிடித்தது.
அத்துடன் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தல் ஆகியோருக்கு, சி.ஐ.டி., போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து, பெங்களூரு அரண்மனை மைதான சாலையில் உள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில், நாகேந்திரா நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.
நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கிய விசாரணை மாலை 4:00 மணி வரை நடந்தது.
'முறைகேட்டில் உங்களுக்கும் தொடர்புள்ளதா? நீங்கள் கூறியதால்தான் பணம் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டதா? அதிகாரி சந்திரசேகர் தற்கொலை' உட்பட பல கேள்விகளை கேட்டு, கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.