/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ராம்நகர்' மாவட்டத்துக்கு 'பெங்களூரு தெற்கு' பெயர் மாற்றும்படி முதல்வரிடம் சிவகுமார் மனு 'ராம்நகர்' மாவட்டத்துக்கு 'பெங்களூரு தெற்கு' பெயர் மாற்றும்படி முதல்வரிடம் சிவகுமார் மனு
'ராம்நகர்' மாவட்டத்துக்கு 'பெங்களூரு தெற்கு' பெயர் மாற்றும்படி முதல்வரிடம் சிவகுமார் மனு
'ராம்நகர்' மாவட்டத்துக்கு 'பெங்களூரு தெற்கு' பெயர் மாற்றும்படி முதல்வரிடம் சிவகுமார் மனு
'ராம்நகர்' மாவட்டத்துக்கு 'பெங்களூரு தெற்கு' பெயர் மாற்றும்படி முதல்வரிடம் சிவகுமார் மனு
ADDED : ஜூலை 10, 2024 05:27 AM

பெங்களூரு : ராம்நகர் மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' மாவட்டமாக பெயர் மாற்றம் செய்யவும்; ராம்நகரை மாவட்டத்தின் தலைமையகமாக அறிவிக்கவும் கோரி, முதல்வர் சித்தராமையாவிடம், துணை முதல்வர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் மனு அளித்தனர்.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையாவை, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், ராம்நகர் மாவட்ட பொறுப்பு வகிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ராம்நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் உசேன், முன்னாள் எம்.பி., சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., லிங்கப்பா ஆகியோர் சந்தித்து மனு வழங்கினர்.
மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பெங்களூரு மாவட்டத்தில், தொட்டபல்லாபூர், நெலமங்களா, எலஹங்கா, தேவனஹள்ளி, ஆனேக்கல், பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, ஹொஸ்கோட், ராம்நகர், மாகடி, கனகபுரா, சென்னபட்டணா ஆகிய தாலுகாக்கள் இருந்தன.
இதன் பின், தொட்டபல்லாபூர், நெலமங்களா, தேவனஹள்ளி, ஹொஸ்கோட், சென்னபட்டணா, ராம்நகர், மாகடி, கனகபுரா ஆகிய தாலுகாக்களுடன் 'பெங்களூரு ரூரல்' மாவட்டமாக 1986ல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2007ல், ஹொஸ்கோட், நெலமங்களா, தேவனஹள்ளி, தொட்டபல்லாபூர் ஆகிய தாலுகாக்கள், 'பெங்களூரு ரூரல்' மாவட்டமாக அறிவிக்கப்பட்டன. அதே வேளையில், மாகடி, ராம்நகர், கனகபுரா, சென்னபட்டணா தாலுகாக்கள், 'ராம்நகர்' மாவட்டமாக உதயமானது.
தற்போது, பெங்களூரு நகருக்குரிய சர்வதேச புகழ், இறையாண்மை, கண்ணியம் ஆகியவை, ராம்நகர், மாகடி, கனகபுரா, சென்னபட்டணா, ஹரோஹள்ளி ஆகிய தாலுகாகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.
எனவே, ராம்நகர், சென்னபட்டணா, மாகடி, கனகபுரா, ஹரோஹள்ளி தாலுகாக்களை ஒன்றிணைத்து, 'ராம்நகர்' மாவட்டத்தை, 'பெங்களூரு தெற்கு' மாவட்டமாக பெயர் மாற்றம் செய்து, ராம்நகரை மாவட்டத்தின் தலைமையகமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் சித்தராமையா, நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பின், துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
என் தலைமையில் முதல்வரை சந்தித்தோம். நாங்கள் அனைவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். முன்னர், ராம்நகர், பெங்களூரு மாவட்டத்தில் இருந்தது. பின், தனி மாவட்டமாக உதயமானது. தற்போது ராம்நகர் பெயருக்கு பதிலாக, 'பெங்களூரு தெற்கு' மாவட்டம் என பெயர் மாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டோம். முதல்வரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமர் பெயர்!
பெங்களூரை 'கிரேட்டர் பெங்களூராக' மாற்றியது யார்? குமாரசாமி முதல்வராக இருந்தபோது, 2007ல் ராம்நகர் மாவட்டமாக உதயமானது. ஆனாலும், வளர்ச்சிப் பணியில், மக்கள் திருப்தியடையவில்லை. வரும் நாட்களில் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து விவாதிப்போம். ராம்நகர் மாவட்டத்துக்கு 'ராமர்' பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதற்கு காங்கிரசார் தான் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து நான் விவாதிக்கமாட்டேன். எங்கள் கட்சி, இன்றும் மதச்சார்பற்றவையாகவே இருக்கிறது.
நிகில் குமாரசாமி,
இளைஞர் அணி தலைவர், ம.ஜ.த.,