கேரள பஸ்களில் ஊர் பெயர் தமிழிலும் எழுதணும்! வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு
கேரள பஸ்களில் ஊர் பெயர் தமிழிலும் எழுதணும்! வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு
கேரள பஸ்களில் ஊர் பெயர் தமிழிலும் எழுதணும்! வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு
ADDED : மார் 12, 2025 10:28 PM
பாலக்காடு; பாலக்காடு மாவட்டத்தில் மொழி சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் தாலுகாக்களில் இயங்கப்படும் தனியார் பஸ்களில், ஊர் பெயர்கள் இனி தமிழ் மொழியிலும் எழுத வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் மொழிச்சிறுபான்மையினரான தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், பஸ்களில் வழித்தடம் குறித்து தமிழ் மொழியில் எழுத வேண்டும் என, நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பஸ்களில் இடத்தின் பெயர் மலையாளத்தில் மட்டும் எழுதுவதால், பாலக்காடு, சித்தூர், மண்ணார்க்காடு தாலுகாக்களில் உள்ள தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி, கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலாளர் பேச்சிமுத்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், பாலக்காடு வட்டார போக்குவரத்து அலுவலர் முஜீப் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் மொழி சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் தாலுகாக்களில் இயங்கப்படும் தனியார் பஸ்களில், ஊர், இடப் பெயர்கள் இனி தமிழ் மொழியிலும் எழுத வேண்டும். பாலக்காடு, சித்தூர், மண்ணார்காடு தாலுகாக்களில் இயங்கும் பஸ்களில் தமிழில் இடத்தின் பெயர் எழுத வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இந்த நடவடிக்கை பொருந்தும். கேரள மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 209ன் விதிகளின்படி, பஸ் அறிவிப்புப் பலகைகளில் தமிழிலும் எழுத வேண்டும்.
பஸ்சின் முன் மற்றும் பின் பக்கங்களில் பயணியர் படிக்கும் அளவில் இடப் பெயர்கள் எழுத வேண்டும். பஸ் சேவை தொடங்கும் இடத்தையும், சென்றடையும் இடத்தையும், வழித்தடத்தையும் எழுத வேண்டும். தமிழில் ஊர், இடத்தின் பெயர்களைக் பதிவு செய்யாத பஸ்கள் மீது, எவ்வித அறிவிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் தமிழ் மொழி சிறுபான்மையினரின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.