கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி
கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி
கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூன் 06, 2024 11:10 PM
புதுடில்லி:லோக்சபா தேர்தலுக்காக தொடர் பிரசாரக்கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனுவை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இன்று அவரது ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தது. திஹார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உச்ச நீதிமன்றம் லோக்சபா தேர்தலை ஒட்டி, நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.
உடல் நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரிய அவரது மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி கூறியது.
இதையடுத்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமின் கேட்டு மற்றொரு மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்குள், உச்ச நீதிமன்றம் அளித்திருந்த இடைக்கால ஜாமின் கெடு முடிவடைந்தது.
இதனால் திஹார் சிறையில் அவர் சரணடைந்தார். அங்கு அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜாமின் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்குவதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமினை பெற்று வெளியே வந்ததில் இருந்து தொடர் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய அமலாக்கத்துறை, தற்போது சிறையில் சரணடைய வேண்டிய நாள் நெருங்கும்போது, மருத்துவ காரணங்களைக் கூறுவதாக குற்றஞ்சாட்டியது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பு வருமாறு:
லோக்சபா தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் செய்த விரிவான பிரசாரங்கள், அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, அவருக்கு தீவிரமான அல்லது உயிர் அச்சுறுத்தல் உள்ள நோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.
அவரது நீதிமன்றக் காவல் வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மனுதாரர் கேட்கும் மருத்துவப் பரிசோதனைகளை சிறையில் இருந்தபடியே ஏன் பெற முடியாது என்பதற்கு அவரிடம் பதில் இல்லை. அதனால் அவரது மருத்துவ தேவைகளை கவனிக்கும்படி, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.
எய்ம்ஸ் அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாக விரிவான உத்தரவு கடந்த ஏப்ரல் 22ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மனுதாரரை மூன்று நாட்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதித்து, அவருக்கு தேவைப்படும் பரிசோதனைகளை பரிந்துரைக்கும்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு இன்று சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.