கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது; இனி எல்லா தண்ணீரும் தமிழகத்துக்கே!
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது; இனி எல்லா தண்ணீரும் தமிழகத்துக்கே!
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது; இனி எல்லா தண்ணீரும் தமிழகத்துக்கே!
UPDATED : ஜூலை 25, 2024 06:19 AM
ADDED : ஜூலை 25, 2024 01:32 AM

மாண்டியா,காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், இரண்டு ஆண்டுகளுக்கு பின் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது. இனி, அணைக்கு வரும் நீர் முழுதும் தமிழகத்துக்கே திறக்கப்படும்.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணை தான் கர்நாடகா, தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்குகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், அணை நிரம்பவில்லை.
நடப்பாண்டு ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை துவங்கியதும், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், 49.452 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி முழு கொள்ளளவை எட்டியது.
அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி தண்ணீர் வந்தது. அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 2022, 2023ல் அணை முழுதும் நிரம்பவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அணை நிரம்பி இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
கர்நாடகாவின் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால், இனி வரும் ஒட்டுமொத்த தண்ணீரும் தமிழகத்துக்கே திறந்து விடப்படும். இதனால், மேட்டூர் அணையும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது.