Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வால்மீகி ஆணைய நிதி முறைகேடு புகார் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா

வால்மீகி ஆணைய நிதி முறைகேடு புகார் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா

வால்மீகி ஆணைய நிதி முறைகேடு புகார் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா

வால்மீகி ஆணைய நிதி முறைகேடு புகார் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா

ADDED : ஜூன் 07, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு,வால்மீகி மேம்பாட்டு ஆணைய நிதி முறைகேடு புகாரை அடுத்து, கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள வால்மீகி என்ற பழங்குடியின சமுதாயத்தினர் நலனுக்காக வால்மீகி மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறது. பெங்களூரில் உள்ள இந்த ஆணையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றியவர் சந்திரசேகர், 52. கடந்த மாதம் 27ம் தேதி, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆணையத்திற்கு, அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாய் நிதியில் முறைகேடுகள் நடப்பதாக, கடிதத்தில் சந்திரசேகர் குறிப்பிட்டிருந்தார். இதன்படி, ஆணைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

வால்மீகி மேம்பாட்டு ஆணையம், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, அத்துறை அமைச்சர் நாகேந்திரா பதவி விலகும்படி பா.ஜ., வலியுறுத்தி வந்தது.

இதற்கிடையில், வால்மீகி ஆணைய நிதியை கையாளும் யூனியன் வங்கி தரப்பு, போலி வங்கி கணக்குகள் துவக்கி நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ.,க்கு நேற்று முன்தினம் புகார் அளித்தது. சி.பி.ஐ.,யும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவங்கியுள்ளது.

இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, நாகேந்திராவை பதவியில் இருந்து நீக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, முதல்வர் சித்தராமையா, நாகேந்திராவை தன் இல்லத்துக்கு அவசரமாக வரவழைத்து, அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி உத்தரவிட்டார். இதன்படி, அவரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின், நாகேந்திரா கூறியதாவது:

என் மீது முறைகேடு குற்றச்சாட்டு வந்துள்ளது. முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் சங்கடம் ஏற்பட கூடாது என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் வேளையில், நான் அமைச்சர் பதவியில் இருப்பதால், அவர்களுக்கு இடையூறு ஏற்படலாம். எனவே மனசாட்சிப்படி, ராஜினாமா செய்கிறேன். யாரும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.45 கோடி முடக்கம்


வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து, தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள, பர்ஸ்ட் பைனான்ஸ் கூட்டுறவு வங்கியின் 18 போலி கணக்குகளுக்கு, 94.73 கோடி ரூபாய் முறைகேடாக செலுத்தப்பட்டிருந்தது. இதில், பெரும்பாலான பணத்தை வங்கியில் இருந்து எடுத்து விட்டனர். இந்த பணம் எங்கே சென்றது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதற்கிடையில், போலி வங்கி கணக்கில் இருந்து, 45 கோடி ரூபாய் பணத்தை, சிறப்பு புலனாய்வு குழு நேற்று முடக்கியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us