ADDED : ஜூன் 05, 2024 01:03 AM

மண்டி:ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி பா.ஜ., வேட்பாளரான நடிகை கங்கனா ரணாவத், 5,37,022 ஓட்டுக்கள் பெற்று வெற்றிவாகை சூடினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங், 4,62,267 ஓட்டுக்களுடன் தோல்வியை தழுவினார்.
விக்ரமாதித்யா சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை வீர்பத்ர சிங், ஹிமாச்சல் முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.
காங்கிரஸ் மேலிட தலைவர்களின் தீவிர விசுவாசியாக இருந்தவர். விக்ரமாதித்யா சிங்கின் தாய் பிரதிபா சிங்கும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு முன், ஒரு கூட்டத்தில் பேசிய விக்ரமாதித்ய சிங், 'ஓட்டு எண்ணிக்கை அன்றே பாலிவுட் நடிகையான கங்கனா மூட்டையை கட்டிக்கொண்டு மும்பைக்கு புறப்படுவார்' என்று கூறியிருந்தார்.
தேர்தல் முடிவுக்கு பின், நேற்று அதை நினைவு கூர்ந்து பேசிய கங்கனா, “காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங், இப்போது மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.
''ஒரு பெண்ணைப் பற்றி இப்படி தரக்குறைவாகப் பேசியதற்கு, மண்டி தொகுதி மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாகக் கொடுத்துள்ளனர். என்னை தங்கள் மகளாக நினைக்கும் மண்டி தொகுதி மக்கள், என்னை அவமானப்படுத்திய விக்ரமாதித்ய சிங்குக்கு கருணை காட்டவில்லை,”என்றார்.
ஹிமாச்சல பிரதேசத்தில், 2014 மற்றும் 2019ல் நடந்த லோக்சபா தேர்தல்களிலும், நான்கு தொகுதிகளையுமே பா.ஜ., கைப்பற்றியது. இப்போதும் நான்கு தொகுதிகளையும் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.