பண மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா
பண மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா
பண மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா
ADDED : ஜூன் 12, 2024 01:06 AM

ராஞ்சி, ஜார்க்கண்டில் பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆலம்கிர் ஆலம், அமைச்சர் பதவி மற்றும் காங்., சட்டசபை தலைவர் பதவியை ராஜினாமா செய்துஉள்ளார்.
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசை சேர்ந்த ஆலம்கிர் ஆலம், 70, ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
ஆலம்கிர் ஆலம், ஊரக மேம்பாட்டுத்துறை தொடர்பான திட்டங்களுக்கு டெண்டர் பணியில் கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சரின் தனி செயலர் சஞ்சீவ் குமார் லால் மற்றும் அவரது வீட்டுப்பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரது வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில், 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் மே 15ல் அமைச்சர் ஆலம் கைது செய்யப்பட்டு, ராஞ்சியில் உள்ள பிர்ஷா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர், ஆலமை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து நேற்று, ஆலம்கிர் ஆலம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது தொடர்பாக முதல்வர் சம்பாய் சோரனுக்கு மத்திய சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஆலம் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், 'காங்., சட்டசபை தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த பதவியை எனக்கு வழங்கி சிறப்பாக பணியாற்ற ஒத்துழைப்பு வழங்கிய கட்சி தலைமைக்கு நன்றி' என கூறியுள்ளார்.