ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு சென்னை மண்டலம் அபாரம்
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு சென்னை மண்டலம் அபாரம்
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு சென்னை மண்டலம் அபாரம்
ADDED : ஜூன் 09, 2024 11:17 PM

புதுடில்லி, ஜூன் 10-
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த முறை, ஐ.ஐ.டி., சென்னை மண்டலத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் முதன்மையான கல்வி நிறுவனங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர, ஜே.இ.இ., தேர்வு நடத்தப்படுகின்றன.
தேர்வு முடிவுகள்
இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வை, ஐ.ஐ.டி., சென்னை மண்டலம் நடத்தியது. மொத்தம் 1,80,200 தேர்வர்கள் கடந்த மாதம் 26ல் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
அதில், 7,964 பெண்கள் உட்பட 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த முறை ஐ.ஐ.டி., சென்னை மண்டலத்தில் இருந்து தேர்வு எழுதியோர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில், முதல் 500 இடங்களை பிடித்தவர்களில் ஐ.ஐ.டி., சென்னை மண்டலத்தில் இருந்து 145 பேரும், மும்பை மண்டலத்தில் இருந்து 136 பேரும், டில்லி மண்டலத்தில் இருந்து 122 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், 179 வெளிநாடு வாழ் இந்தியர்களும், ஏழு வெளிநாட்டினரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.
டில்லி மண்டலத்தை சேர்ந்த வேத் லஹோதி 360க்கு 355 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.
டில்லி மண்டலத்தை சேர்ந்த ஆதித்யா இரண்டாம் இடத்திலும், சென்னை மண்டலத்தை சேர்ந்த போகல்பள்ளி சந்தேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
நான்கு பேர்
பெண் தேர்வர்களில், மும்பை மண்டலத்தை சேர்ந்த த்விஜா தர்மேஷ்குமார் படேல், 332 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் இந்திய அளவில் ஏழாம் இடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களை பிடித்த தேர்வர்களில், நான்கு பேர் ஐ.ஐ.டி., சென்னை மண்டலத்தை சேர்ந்தவர்கள்.