புதிய விமான நிலையத்திற்கு 5 நிபந்தனைகள் தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
புதிய விமான நிலையத்திற்கு 5 நிபந்தனைகள் தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
புதிய விமான நிலையத்திற்கு 5 நிபந்தனைகள் தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
ADDED : ஜூலை 11, 2024 06:21 AM

பெங்களூரு : ''ஐந்து நிபந்தனைகளின் அடிப்படையில், பெங்களூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு இடம் இறுதி செய்யப்படும்,'' என, மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, நேற்று விதான் சவுதாவில் அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:
நாட்டிலேயே மூன்றாவது பெரிய விமான நிலையமாக, கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. 2023 - 24ல் 5.75 கோடி பயணியர், சர்வதேச விமான நிலையம் வழியாக பெங்களூரு வந்து சென்றுள்ளனர்.
வரும் 2035க்குள் இங்கு வரும் பயணியரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
5 நிபந்தனைகள்
புதிய விமான நிலையம் அமைக்க, ஐந்து நிபந்தனைகள் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தொழில்நுட்ப செயல்திறன், இணைப்பு, பயணியர் வசதி, வசதியான நிலம், தற்போதைய விமான நிலையத்துக்கு இணைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுள்ளோம். பெரும்பாலான பயணியர் எங்கிருந்து வருகின்றனர், விமான நிலையம் கட்டப்படும் நில பகுதியில் காற்றின் திசை அனைத்தையும் கருத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த அனைத்து நிபந்தனைகளின் அடிப்படையில் இடம் அடையாளம் காணப்படும். மைசூரு சாலை, மாகடி, தாபஸ்பேட், ஜிகனி, துமகூரு, கனகபுரா ஆகிய பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்க அதிகளவில் கோரிக்கைகள் வருகின்றன.
5,000 ஏக்கர்
புதிய சர்வதேச விமான நிலையம், ஒரு கோடி பயணியர் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படும். இதற்காக, 5,000 ஏக்கர் நிலம் தேவைப்படும். இது தொடர்பாக இரண்டாவது கூட்டம் நடத்தி, நிபுணர்களின் ஆலோசனை கேட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் செய்வது சரியா?
அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ''ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிப்பதாக அறிக்கை அளித்துள்ளது. செய்யாதே என்று சொல்ல முடியாது. அவர், அறிக்கை வெளியிட சுதந்திரம் உள்ளது. விமான நிலையம் கட்டுமானத்துக்காக, பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம், அவர்களுக்கும் பொருந்தும்,'' என்றார்.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துடன், மாநில அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, 2033 வரை 150 கி.மீ., சுற்றளவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கவும்; 2035க்குள், பெங்களூரு விமான நிலையத்தில் இரண்டாவது ஓடு பாதையை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பில்லை.