அருணாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ...அமோக வெற்றி!: சிக்கிமில் 2 வது முறையாக எஸ்.கே.எம்., அரசு
அருணாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ...அமோக வெற்றி!: சிக்கிமில் 2 வது முறையாக எஸ்.கே.எம்., அரசு
அருணாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ...அமோக வெற்றி!: சிக்கிமில் 2 வது முறையாக எஸ்.கே.எம்., அரசு
UPDATED : ஜூன் 03, 2024 02:05 AM
ADDED : ஜூன் 02, 2024 11:59 PM

இடாநகர்:லோக்சபா தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில், அருணாச்சல பிரதேசத்தில், பா.ஜ., மூன்றாவது முறையாக தொடர்ந்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், ஆளும் எஸ்.கே.எம்., எனப்படும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
![]() |
லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதனுடன், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தலும் நடந்தது.
இதில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சட்ட சிக்கல்களை தவிர்க்க, அந்த மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதி களில், 46ல் வென்று, பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
முதல்வர் பெமா காண்டு உட்பட, 10 பா.ஜ.,வினர் போட்டியின்றி வென்றனர். இதையடுத்து, 50 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 36ல் பா.ஜ., வென்றது.
பிரதமர் வாழ்த்து
கடந்த, 2019 தேர்தலில், பா.ஜ., 41ல் வென்றது. இந்த முறை, அதன் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. என்.பி.பி., எனப்படும் தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் மூன்று இடங்களிலும், பி.பி.ஏ., எனப்படும் அருணாச்சல் மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும் வென்றன.
காங்கிரஸ் ஒரு இடத்திலும், மூன்று இடங்களில் சுயேச்சைகளும் வென்றன.
இந்த வெற்றி குறித்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது:
![]() |
அருணாச்சலுக்கு நன்றி. வளர்ச்சி அரசியலுக்கு இந்த சிறப்பான மாநிலத்தின் மக்கள். தங்களுடைய தடையில்லா தீர்ப்பை அளித்துள்ளனர்.
பா.ஜ., மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சியில் இன்னும் வேகத்துடன் எங்கள் கட்சி பணியாற்றும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த சிறப்பான வெற்றிக்கு உழைத்த கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாராட்டுகள். மக்களுடன் எந்தளவுக்கு இணைந்துள்ளீர்கள் என்பது இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றபோதும், அருணாச்சல பிரதேச கல்வி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான டபா தெடிர், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரிடம், 228 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சிக்கிம்
மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், மொத்தமுள்ள 32 இடங்களில், 31ல் வென்று ஆளும் எஸ்.கே.எம்., எனப்படும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைக்க உள்ளது.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங், இரண்டிலும் தோல்வியடைந்தார்.
முதல்வரும், எஸ்.கே.எம்., தலைவருமான பிரேம் சிங் தமாங், தான் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்றார். அந்தக் கட்சிக்கு, 58.38 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. கடந்த தேர்தலில், எஸ்.கே.எம்., 17ல் வென்றது.
பா.ஜ., 31 இடங்களில் போட்டியிட்டது, அதற்கு, 5.18 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரஸ், 0.32 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. இது, 'நோட்டா' எனப்படும் யாருக்கும் ஆதரவில்லை என்பதற்கு கிடைத்த, 0.99 சதவீத ஓட்டுகளைவிட குறைவாகும். இங்கு, காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட இந்திய கால்பந்து முன்னாள் வீரர் பாய்ச்சுங் பூட்டியா, பர்புங் தொகுதியில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
சிக்கிமில் வென்ற எஸ்.கே.எம்., கட்சிக்கும், முதல்வர் தமாங்குக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளப் பதிவில், 'சட்டசபை தேர்தலில் வென்ற, எஸ்.கே.எம்., மற்றும் முதல்வருக்கு வாழ்த்துகள். மாநிலத்தின் வளர்ச்சியில் உங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக காத்திருக்கிறேன்' என, அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போதைய 10வது சட்டசபையை கலைத்து, சிக்கிம் கவர்னர் லக் ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அருணாச்சல பிரதேச கவர்னர் கைவல்ய திருவிக்ரம் பரநாயக்கும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். புதிய சட்டசபை விரைவில் அமைக்கப்படும் என, அவர்களுடைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.