ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் வெள்ளம் 3 மாணவர் பலியால் உரிமையாளர் கைது மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம்
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் வெள்ளம் 3 மாணவர் பலியால் உரிமையாளர் கைது மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம்
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் வெள்ளம் 3 மாணவர் பலியால் உரிமையாளர் கைது மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம்
ADDED : ஜூலை 28, 2024 11:39 PM

புதுடில்லி: டில்லியில் தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தில் வெள்ளம் புகுந்ததில் மூன்று மாணவர் பலியான விவகாரத்தில், அதன் உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
இதனால், டில்லியின் மேற்கு பகுதியில் உள்ள ராஜேந்திர நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் 'பேஸ்மென்ட்' எனப்படும் கீழ் தரைத்தளத்தில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் புகுந்தது.
அங்குள்ள நுாலகத்தில் படித்துக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். சில நிமிடங்களில் வெள்ளத்தின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்ததை அடுத்து, வெளியேற முடியாமல் தவித்த மாணவர்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு ஐந்து வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மற்றொருபுறம், வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி மீட்டனர். ஏழு மணி நேரப் போராட்டத்துக்கு பின் தரைத்தளத்தில் சிக்கிய பெரும்பாலான மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
இருப்பினும், இரு பெண்கள் உட்பட மூன்று மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பயிற்சி மையத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் மழை வெள்ளத்தில் அடித்து வந்ததால், மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டு, மூன்று பேரை காப்பாற்ற முடியாமல் போனதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷ்ரேயா யாதவ், 25; தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, 25;
தொடர்ச்சி 7ம் பக்கம்
கேரளாவைச் சேர்ந்த நவீன் தால்வின், 28, என தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அலட்சியமாக செயல்படுதல், விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 24 மணி நேரத்துக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய டில்லி தலைமைச் செயலர் நரேஷ் குமாருக்கு, மாநில அமைச்சர் ஆதிஷி உத்தரவிட்டுள்ளார். ''இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரும் சட்டத்தின் முன் தப்ப முடியாது,'' என, அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, அக்கட்சி எம்.பி., பன்சூரி ஸ்ராஸ் ஆகியோர், மூன்று மாணவர்கள் பலியானதற்கு, பொறுப்பற்ற ஆம் ஆத்மி அரசே காரணம் என குற்றஞ்சாட்டினர். 'அடைப்பு ஏற்பட்ட சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என இங்குள்ள மக்கள் கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., துர்கேஷ் பதக்கிடம் முறையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இந்த துயர சம்பவத்துக்கு காரணம்' என அவர்கள் புகார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் பலியானதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே சக மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பாதாளக் சாக்கடை அடைப்பைச் சரி செய்யாததால்தான் கட்டடத்தின் தரைத் தளத்தில் மழை நீர் புகுந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
'டில்லி மாநகராட்சி நிர்வாகம், இது ஒரு பேரிடர் என கூறுகிறது. இல்லவே இல்லை. எங்கள் நண்பர்கள் உயிரிழந்ததற்கு மாநகராட்சி அதிகாரிகளே அலட்சியமே காரணம். அரை மணி நேரத்தில் முழங்கால் அளவு வரை தண்ணீர் எப்படி வரும்? பயிற்சி மைய உரிமையாளர்களுமே இதற்கு காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அந்த கட்சியின் எம்.பி., ராகுல் ஆகியோரும், 'உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தான், இந்த விபத்துக்கு காரணம்' என, தெரிவித்துள்ளார்.
டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா கூறுகையில், ''தலைநகரில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பயிற்சி மைய கட்டடம் முறையாக பரமாரிக்கப்படாததும், அலட்சியமாக செயல்பட்டதுமே விபத்துக்கு காரணம். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.
இதற்கிடையே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பயிற்சி மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.