ஹிந்தி திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை
ஹிந்தி திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை
ஹிந்தி திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை
ADDED : ஜூன் 07, 2024 11:15 PM

பெங்களூரு: கர்நாடகாவில் ஹமாரே பாரா என்ற ஹிந்தி திரைப்படத்தை, இரு வாரங்கள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வெளியிட தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குனர் கமல் சந்திரா இயக்கத்தில், நடிகர் அன்னு கபூர் நடிப்பில், ஹமாரே பாரா என்ற ஹிந்தி திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் கடந்த மே 30ல் வெளியானது. இதில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் இழிவாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இது, தற்போது நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் திட்டமிட்டபடி படம் நேற்று வெளியானது.
இது குறித்து, பாலிவுட் நடிகர் அன்னு கபூர் கூறுகையில், ''படத்தை முழுமையாக பார்த்து விட்டு விமர்சனம் செய்ய வேண்டும்; வெறும் டிரெய்லரை பார்த்து கருத்து சொல்வதை ஏற்க முடியாது,'' என்றார்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், ஹமாரே பாரா படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அம்மாநில அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகாவில் ஹமாரே பாரா படத்தை இரு வாரங்கள் அல்லது மறு உத்தரவு வரும் வரை வெளியிடக் கூடாது. அப்படத்தின் டிரெய்லரை பார்த்த பின், அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மேலும், மாநிலத்தில் வகுப்புவாத பதற்றத்தை தவிர்க்கும் வகையில், படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.