சுவாதி தாக்கப்பட்ட வழக்கு நிலை அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்
சுவாதி தாக்கப்பட்ட வழக்கு நிலை அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்
சுவாதி தாக்கப்பட்ட வழக்கு நிலை அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்
ADDED : ஜூன் 15, 2024 01:38 AM

இந்தியா கேட்:ஆம் ஆத்மி ராஜ்யசபா உறுப்பினர் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த பிபப் குமார் மனு குறித்து கருத்து தெரிவிக்கும்படி, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால ஜாமின் பெற்று தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்திருந்தார். அவரை சந்திக்க கடந்த மாதம் 13ம் தேதி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினர் சுவாதி மாலிவால் சென்றிருந்தார்.
அப்போது தன்னை முதல்வரின் தனிச் செயலர் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் பரபரப்பு புகார் கூறினார். இந்த வழக்கில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிபவ் குமாரை 18ம் தேதி கைது செய்தனர்.
அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், பின்னர் அவரை திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் மே 27ம் தேதி தள்ளுபடி செய்தது.
அதைத் தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மனுவை தீஸ் ஹசாரி நீதிமன்றம் ஜூன் 7ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பிபவ் குமார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி அமித் ஷர்மாவின் விடுமுறை கால அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிபவ் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் புகார்தாரரிடம் இருந்து விசாரணை அதிகாரியே நேரடியாக வாக்குமூலம் பெற்றுவிட்டார். மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவிட்டார்.
இதனால் மனுதாரரை நீதிமன்றக்காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருவதால், மனுதாரருக்கு ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
பிபவ் குமார் மனு குறித்து கருத்து தெரிவிக்கும்படியும், நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமின் மனு மீதான விசாரணை ஜூலை முதல் வாரத்தில் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் பட்டியலிட்டது.