ஹரப்பா நாகரிகத்தை சிந்து - சரஸ்வதி என்றும் சொல்லலாம்: என்.சி.இ.ஆர்.டி.,
ஹரப்பா நாகரிகத்தை சிந்து - சரஸ்வதி என்றும் சொல்லலாம்: என்.சி.இ.ஆர்.டி.,
ஹரப்பா நாகரிகத்தை சிந்து - சரஸ்வதி என்றும் சொல்லலாம்: என்.சி.இ.ஆர்.டி.,
ADDED : ஜூலை 22, 2024 03:53 AM

புதுடில்லி : ஹரப்பா நாகரிகம் என்பதை, சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்றும் குறிப்பிடலாம் என, என்.சி.இ.ஆர்.டி.,யின் ஆறாம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது.
இந்த கவுன்சில் தயாரிக்கும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி இடைநிலை வாரியம் உட்பட பல கல்வி வாரியங்களால் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது, ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை அறிவோம் - இந்தியா மற்றும் அதற்கு அப்பால் என்ற தலைப்பின் கீழ் வரும் பாடத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தொல்லியல் துறையினர், ஹரப்பா நாகரிகத்துக்கு பல பெயர்களை கொடுத்துள்ளனர். இண்டஸ், ஹரப்பன், இண்டஸ் - சரஸ்வதி, சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஹரப்பா என்பது நிலப்பரப்பையும், ஹரப்பர்கள் என்பது, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களையும் குறிக்கும்.
அதனால், சிந்து - சரஸ்வதி நாகரிகம் உட்பட இந்தப் பெயர்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தவிர, சரஸ்வதி நதி தொடர்பாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்பு சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட நதி தற்போது இந்தியாவில் காக்கர் என்று அறியப்படுகிறது; பாகிஸ்தானில் ஹாக்ரா என்று அழைக்கப்படுகிறது.
இந்த நதி குறித்து, ரிக் வேதம் உட்பட பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என பாட புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.