பொது தேர்வில் தோற்றவர்களுக்கு பள்ளிகளில் மீண்டும் பயிற்சி
பொது தேர்வில் தோற்றவர்களுக்கு பள்ளிகளில் மீண்டும் பயிற்சி
பொது தேர்வில் தோற்றவர்களுக்கு பள்ளிகளில் மீண்டும் பயிற்சி
ADDED : ஜூலை 22, 2024 03:57 AM

சென்னை : தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கள் நடத்தப்படுகின்றன. மூன்று வகுப்புகளிலும் சேர்த்து ஆண்டுதோறும், 25 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
அவர்களில், கடந்த கல்வி யாண்டில் மட்டும், 10ம் வகுப்பில், 75,521 பேர்; பிளஸ் 1ல், 71,633 பேர்; பிளஸ் 2வில், 41,410 பேர் என, 1.88 லட்சம் பேர், சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
பிளஸ் 1 மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 வகுப்பில் தொடர்ந்து பங்கேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியும். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும் பள்ளியில் படித்தவாறே தேர்வு எழுதலாம்.
அதேநேரம், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களும், பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களும், பள்ளிகளில் மீண்டும் அதே வகுப்பில் அனுமதிக்கப்படுவதில்லை. மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படுவர்.
அவர்கள் வெளியே தனியார் நிறுவனங்களில், 'டியூஷன்' படித்து, தனித்தேர்வர்களாகவே தேர்வு எழுத வேண்டும்.
இந்நிலையில், ஆந்திராவில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களை, மீண்டும் பள்ளிகளில் சேர்த்து, 'ரெகுலர்' மாணவர்களுடன் ஆண்டு முழுதும் சிறப்பு பயிற்சி கொடுக்கின்றனர்.
அதனால், பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்கள், இரண்டாவது முயற்சியில் பெரும்பாலும் தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.
இந்த திட்டத்தை, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் அமல்படுத்தினால், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என, மத்திய கல்வித்துறை யோசனை தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, மீண்டும் அதே பள்ளிகளில் சேர்த்து, சிறப்பு பயிற்சி அளிக்கலாமா என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்திஉள்ளனர்.
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, இந்த நடைமுறையை துவங்குவதற்கான கருத்துரு தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.