கட்டட கலைக்கு பெயர் பெற்ற ஹம்பி சண்டிகேஸ்வரர் கோவில்
கட்டட கலைக்கு பெயர் பெற்ற ஹம்பி சண்டிகேஸ்வரர் கோவில்
கட்டட கலைக்கு பெயர் பெற்ற ஹம்பி சண்டிகேஸ்வரர் கோவில்
ADDED : ஜூன் 04, 2024 04:40 AM

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில் விஜயநகர பேரரசர்கள் ஆண்ட பிரசித்தி பெற்ற புராதன ஹம்பி நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள புராதன நினைவு சின்னங்களை பார்ப்பவர்கள், அந்த கால மன்னர்கள் எப்படி ஆட்சி புரிந்திருப்பர் என்ற உணர்வு மனதில் தோன்றும். அந்த அளவுக்கு அரிய கட்டட கலைகள், நினைவு சின்னங்களை இன்றளவும் காண முடியும்.
ஹம்பி வரும் பெரும்பாலானோர், விருபாக் ேஷஸ்வரா கோவிலை மட்டுமே அறிந்திருப்பர். அதே, ஹம்பி நகருக்கு செல்லும் முக்கிய சாலையில், விஜயநகர பேரரசர்கள் காலத்தின் சண்டிகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பெரிய மண்டபம்
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோவில், இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிறிய காம்பவுண்ட் வளாகத்தில் கோவில் உள்ளது. முற்றத்தில் பெரிய மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தை, 700 துாண்கள் தாங்கி பிடிக்கின்றன.
ஒவ்வொன்றிலும் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது, விஜயநகர பேரரசர்களின் கட்டட கலையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு துாணிலும் ஒவ்வொரு கடவுள் விக்ரகம் செதுக்கப்பட்டுள்ளன.
நுழைவு வாயிலில் சிங்கம், குதிரை, யானை என ஹிந்து புராணங்களில் வரும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. மையத்தில் பிரதான கோவில் விஷ்ணுவுக்கும், வடமேற்கு பகுதியில் உள்ள சிறிய கோவில் அம்மனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இயற்கை பேரழிவு
இவ்விரு கோவில்களிலின் கருவறையில் விக்ரகங்கள் இல்லை. மன்னர் ஆட்சி முடியும் போது, காணாமல் போனதாக கருதப்படுகிறது. மீண்டும் புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. கோவிலின் சில பகுதிகள் இயற்கை பேரழிவுகளால் சிதைந்து காணப்படுகின்றன.
பழங்கால கட்டட கலையை காண்பதற்காகவே ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியர், சண்டிகேஸ்வரர் கோவிலுக்கு வருவதுண்டு. கோவிலை பார்த்து, மாணவர்கள் முதல், பெரியோர் வரை அனைத்து தரப்பினருமே பிரமிப்பு அடைவது உறுதி.
பஸ், ரயில், விமானம் என எந்த மார்க்கத்திலும் விஜயநகராவுக்கு சுலபமாக செல்ல முடியும். வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் குவிந்திருப்பர்.
கடந்தாண்டு 'ஜி 20' நாடுகளின் பிரதிநிதிகள், இங்கு வந்து கட்டட கலையை பார்த்து வியந்தனர். பலரும் ஆர்வத்துடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். அங்கு சில நிகழ்ச்சிகளும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.