அரசு பஸ் டிக்கெட் உயருமா; உயராதா? குழப்பிய அமைச்சர், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவர்
அரசு பஸ் டிக்கெட் உயருமா; உயராதா? குழப்பிய அமைச்சர், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவர்
அரசு பஸ் டிக்கெட் உயருமா; உயராதா? குழப்பிய அமைச்சர், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவர்
ADDED : ஜூலை 15, 2024 05:40 AM

பெங்களூரு : அமைச்சர், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவரின் பேச்சால், கர்நாடகாவில் அரசு பஸ் டிக்கெட் கட்டணம் உயருமா, உயராதா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில், நான்கு பிரிவுகளாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மாநிலம் முழுதும் 'சக்தி' திட்டத்தின் கீழ், பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதற்கிடையில், பஸ் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அடிக்கடி பேசப்படுகிறது; பின்னர் மறுக்கப்படுகிறது.
இந்த வகையில், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவர் சீனிவாஸ், துமகூரில் நேற்று காலை கூறியதாவது:
மாநிலத்தில் கடைசியாக 2019ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின் உயர்த்தப்படவில்லை. தற்போது 5 ஆண்டுகள் கழித்து உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சராசரியாக 15 - 20 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்த்த அனுமதி தரும்படி அரசை கேட்டுள்ளோம். ஒப்புதல் அளித்தவுடன் உயர்த்தப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாலும், இந்தாண்டு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் உயர்த்த வேண்டும் என்பதாலும், பஸ் கட்டணம் உயர்த்தப்பட வேண்டியது அவசியம்.
நடப்பு முதல் காலாண்டில், 295 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது பயணியரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. பலரும் அரசை திட்டி கொண்டிருந்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூரில் நேற்று மாலையில் கூறுகையில், ''பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்த அனுமதி கோரி, அரசிடம் கேட்கவில்லை. பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது,'' என்றார்.
இதன் பின்னரே, பயணியர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அமைச்சருக்கும், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவருக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.