கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?
கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?
கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?
ADDED : ஜூலை 10, 2024 04:19 AM

பெங்களூரு : 'கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய், கபாப் ஆகிய உணவுப் பொருட்களில் செயற்கை நிறமூட்டி கலப்பதால் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது' என, உணவு பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை செயற்கை நிறமூட்டி கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய், சிக்கன் கபாப் விற்பனை செய்ய, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை தடை விதித்துள்ளது.
'ஏன் இப்படி உணவுப்பொருட்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது' என பொதுமக்கள் பலரிடம் கேள்வி எழுந்தது. இதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கமிஷனர் சீனிவாஸ் அளித்துள்ள விளக்கம்:
சில உணவுப் பொருட்களை சாப்பிட்ட பின், வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல்நல கோளாறுகள் ஏற்படுவது குறித்து, எங்களுக்கு பல புகார்கள் வந்தன. இதனால் 4,000 உணவு மாதிரிகளை சேமித்து பரிசோதனைக்கு அனுப்பினோம்.
இதில் கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய், சிக்கன் கபாப்பில், வண்ணத்தை அதிகரிக்கும் வகையில், டார்ட்ராசேன், சன்செட் எல்லோ, ரோடமைன் பி, பிரில்லியன்ட் ப்ளூ போன்ற செயற்கை நிறமூட்டிகளை சேர்ப்பது தெரிந்தது.
செயற்கை நிறமூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட்டால், மனிதர்களுக்கு புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படும்; கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உடன், சுவாசக் குழாயை பாதிக்கவும் வாய்ப்பிருப்பதும் தெரிந்தது. இதனால் தடை செய்துள்ளோம்.
இதையும் மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.