குடும்பத்தினருடன் பொழுபோக்க குடிபண்டே கோட்டை
குடும்பத்தினருடன் பொழுபோக்க குடிபண்டே கோட்டை
குடும்பத்தினருடன் பொழுபோக்க குடிபண்டே கோட்டை
ADDED : ஜூன் 20, 2024 05:59 AM

கர்நாடக தலைநகரான பெங்களூரில் ஏராளமான ஐ.டி., - பன்னாட்டு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு வேலை செய்பவர்கள் வார இறுதி விடுமுறை நாட்களில், குடும்பத்தினருடன் எங்கேயாவது சுற்றுலா சென்று வரலாம் என்று நினைப்பர்.
அதிலும் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள், சுற்றுலா தலம் இருந்தால் தங்கள் காரிலே ஜாலியாக ஒரு ரைடு சென்று விட்டு வரலாம் என்றும் நினைப்பதுண்டு. இப்படி நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது குடிபண்டே கோட்டை.
சிக்கபல்லாப்பூர் குடிபண்டே டவுனில் உள்ளது குடிபண்டே கோட்டை. இந்த கோட்டை, கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெங்களூருக்கு அருகில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில், இந்த கோட்டையும் முக்கியமான இடமாக திகழ்கிறது.
இந்த கோட்டை 17ம் நுாற்றாண்டில், விஜயநகர பேரரசின் துளுவ வம்சத்தின், பைரேகவுடா என்பவரால் கட்டப்பட்டுள்ளது. மலைக்கு மேல் கோட்டை அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து 500 படிக்கட்டுகள் ஏறி, மலை உச்சியை சென்றடைய வேண்டும்.
கோட்டைக்கு செல்லும் வழியில் சிவன், பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கோவில்கள் உள்ளன.
சிவன் கோவிலை சர் ராமேஸ்வரர் கோவில் என பக்தர்கள் அழைக்கின்றனர். இந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம்.
மலை உச்சிக்கு சென்ற பின்னர், அங்கிருந்து குடிபண்டே நகரின் அழகை கண்டு ரசிக்கலாம்.
இது தவிர கோட்டையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, பைர சாகர் ஏரியின் அழகை கண்கூடாக கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினருடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ ஏற்ற இடமாகவும் இந்த கோட்டை அமைந்துள்ளது.
கோட்டையில் இருந்து புறப்பட்ட பின்னர், பைர சாகர் ஏரிக்கு சென்று சிறிது நேரம் பொழுது போக்கலாம். மொத்தத்தில் குடும்பத்தினருடன் ஒரு நாளை கழிக்க ஏற்ற இடமாக குடிபண்டே கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன
.- - நமது நிருபர்- -