ஆடி மாதத்திலும் பூக்கள் விலை 'கிடுகிடு'
ஆடி மாதத்திலும் பூக்கள் விலை 'கிடுகிடு'
ஆடி மாதத்திலும் பூக்கள் விலை 'கிடுகிடு'
ADDED : ஜூலை 21, 2024 07:24 AM

பெங்களூரு: ஆடி மாதம் துவங்கியதை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
பொதுவாக ஆடி மாதத்தில், திருமணம், நிச்சயதார்த்தம், கிரஹ பிரவேசம் போன்ற, சுப நிகழ்ச்சிகள் நடக்காது. பண்டிகைகளும் இருப்பதில்லை. இதனால் பூக்களுக்கு தேவை குறைந்திருக்கும். ஆடி மாதம் பூக்களின் விலை மலிவாக இருக்கும்.
ஆனால் இம்முறை ஆடி மாதத்தில், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதற்கு முன், கிலோவுக்கு 70 முதல் 80 ரூபாயாக இருந்த சாமந்தி பூவின் விலை, இப்போது 250 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சில்லரை வியாபாரிகள், கால் கிலோ பூவை, 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.
மல்லிகை, கனகாம்பரம், காக்கடா, ரோஜா, முல்லை உட்பட அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தற்போதைக்கு விலை குறையாது. ஆவணி மாதம் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொடர் பண்டிகைகள் வருகின்றன. விலை மேலும் அதிகாரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை கோடை காலத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், விவசாயிகள் பூக்கள் பயிரிடவில்லை. பூக்கள் விளைச்சல் குறைந்ததால், மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாகும்.