கார்வாரில் 50 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் மண் சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு
கார்வாரில் 50 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் மண் சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு
கார்வாரில் 50 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் மண் சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு
ADDED : ஜூலை 08, 2024 06:47 AM

கார்வார்: கார்வார் அருகே நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் 50 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மண் சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான உடுப்பி, உத்தர கன்னடாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் காலையிலிருந்து இரவு வரை உத்தர கன்னடா மாவட்டத்தில் மழை இல்லை. ஆனால் நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
வீட்டிற்குள் முடக்கம்
இந்த மழையால் கார்வார் அருகே செண்டியா, இடூர் ஆகிய கிராமங்களில் 50 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று காலை வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர்.
ஹொன்னாவர் அருகே கர்ணல் மலையில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தை ஒட்டி செல்லும், எடப்பள்ளி -- பன்வெல் தேசிய நெடுஞ்சாலை 66-ல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அங்கோலா தாலுகா ஹரவாடா கிராமத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், கடலை ஒட்டி அமைந்துள்ள 50 வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விடும் சூழ்நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள், தங்கள் உறவினர்கள் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
உடுப்பியின் ஹெப்ரி, குந்தாபூர், பைந்துார், பிரம்மாவர், கார்கலா, காபு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. குந்தாபூர் அருகே பெல்லால் என்ற இடத்தில் சரோஜ் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
கனமழையால் சுவர்ணா, சீதா, பாபநாசினி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மல்பே கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ஆனால் பயப்படாமல் சுற்றுலா பயணியர் மொபைல் போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார் எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
உடுப்பியை ஒட்டி அமைந்துள்ள ஷிவமொகா சாகர் பகுதிகளும் கனமழை பெய்து வருகிறது. ஆகும்பே மலைப்பாதையில் பெய்து வரும் கனமழையால், அங்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் வாகனங்களை நிறுத்திவிட்டு, மொபைல் போன்களில் உற்சாகமாக 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர்.
தடுப்பு சுவர் சேதம்
இந்த மலைப்பாதையின் ஆறாவது வளைவில் சாலை தடுப்பு சுவர் உடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களுக்கு 11 ம் தேதி வரை 'ஆரஞ்சு அலெர்ட்'; பீதர், கலபுரகி, யாத்கிர் மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வட மாவட்ட பகுதிகளான பாகல் கோட், தார்வாட், கதக், கொப்பால், விஜயபுரா, ராய்ச்சூர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு, சாம்ராஜ் நகர், சித்ரதுர்கா, ஹாசன், குடகு, கோலார், மாண்டியா, மைசூரு, ராம்நகர், துமகூரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆபத்தை உணராமல்...
தொடர் கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனை காண செல்லும் சுற்றுலா பயணியர், ஆர்வ மிகுதியால் ஆபத்தை உணராமல், நீர்வீழ்ச்சியின் அருகில் சென்று 'செல்பி' புகைப்படம் எடுக்கின்றனர்.
கோகாக் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்று சுற்றுலா பயணியர் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ நேற்று வெளியானது. கடலோர மாவட்டங்களிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தாலும், கடலில் பாறைகள் மீது நின்று கொண்டு சுற்றுலா பயணியர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
� எடப்பள்ளி -- பன்வெல் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இடம்: ஹொன்னாவர், உத்தர கன்னடா.� செண்டியா கிராமத்தை சூழ்ந்துள்ள மழை நீர். இடம்: செண்டியா, கார்வார்.� அனாசி- உலவி கிராமங்களை இணைக்கும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடம்: ஜோய்டா, உத்தர கன்னடா.