பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஐந்து போலீசார் 'டிஸ்மிஸ்'
பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஐந்து போலீசார் 'டிஸ்மிஸ்'
பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஐந்து போலீசார் 'டிஸ்மிஸ்'
ADDED : ஆக 04, 2024 01:01 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஐந்து போலீசார் உட்பட ஆறு பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
தேச விரோத செயல்களில் ஈடுபட்ட காவல் துறையைச் சேர்ந்த பரூக் அகமது ஷேக், சைப் தின், காலித் ஹுசியன் ஷா, இர்ஷாத் அகமது சால்கூ, ரஹ்மத் ஷா மற்றும் ஆசிரியர் நஜாம் தின் என, மொத்தம் ஆறு பேரை பணியில் இருந்து நீக்கி, துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுஉள்ளார்.
இதில், பரூக் அகமது ஷேக் தலைமை காவலராகவும், சைப் தின், காலித் ஹுசியன் ஷா, இர்ஷாத் அகமது சால்கோ ஆகியோர் தேர்வு நிலை காவலர்களாகவும், ரஹ்மத் ஷா கான்ஸ்டபிளாகவும் பணியாற்றி வந்தனர்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில், இவர்களுக்கு தொடர்பு இருப்பதை மத்திய விசாரணை அமைப்புகள் கண்டறிந்ததை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தோடா மாவட்டத்தின் ஷிகானி பல்லேசா என்ற பகுதியைச் சேர்ந்த சைப் தின், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதோடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு வேலை செய்தார்.
குப்வாரா மாவட்டத்தின் இப்கூட் டாங்தார் பகுதியில் வசிக்கும் தலைமை காவலரான பரூக் அகமது ஷேக், காலித் ஹுசியன் ஷா மற்றும் ரஹ்மத் ஷாவுடன் இணைந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கடத்தல்காரர்களிடமிருந்து, ஏராளமான போதைப் பொருட்களை வாங்கி வினியோகம் செய்துள்ளனர்.
மேலும் இந்த மூன்று பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தனர்.
பாரமுல்லாவின் யூரியின் சிலிகோட் பகுதியில் வசிக்கும் இர்ஷாத் அகமது சால்கோ, லஷ்கர் - -இ- - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு வேலை செய்து வந்துள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தின் கிர்னி ஹவேலியில் வசிக்கும் ஆசிரியர் நஜாம் தின், போதைப் பொருட்களை கடத்தியதோடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.