ஊடுருவல் அதிகரிப்பு எதிரொலி? அதிகாரிகள் துாக்கியடிப்பு
ஊடுருவல் அதிகரிப்பு எதிரொலி? அதிகாரிகள் துாக்கியடிப்பு
ஊடுருவல் அதிகரிப்பு எதிரொலி? அதிகாரிகள் துாக்கியடிப்பு
ADDED : ஆக 04, 2024 12:58 AM

புதுடில்லி: பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ஜெனரல் நிதின் அகர்வால், சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஒய்.பி.குரானியா ஆகியோரை, பணியில் இருந்து உடனடியாக விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊடுருவல் அதிகரிப்பு, முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது தான், இந்த அதிரடி மாற்றத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய படைகளில் மிக முக்கிய படையாக பி.எஸ்.எப்., விளங்குகிறது. மேற்கில் பாகிஸ்தான், கிழக்கில் வங்கதேசத்துடனான எல்லை பகுதிகளில், பி.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும், அவர்களின் ஊடுருவலை தடுப்பதிலும் இவர்களது பங்கு அளப்பரியது.
இந்நிலையில், பி.எஸ்.எப்., இயக்குனர் ஜெனரல் நிதின் அகர்வாலை பணியில் இருந்து விடுவித்து, அமைச்சரவை நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது. 1989 கேரள கேடரைச் சேர்ந்த நிதின் அகர்வால், பி.எஸ்.எப்., இயக்குனர் ஜெனரலாக 2023 ஜூனில் நியமிக்கப்பட்டார்.
இதே போல், 1990 ஒடிசா கேடரைச் சேர்ந்த சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஒய்.பி.குரானியாவும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும், மாநில அரசு பணிகளுக்கு உடனடியாக அனுப்பப்படுவதாக, அமைச்சரவை நியமனக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
சமீபகாலமாக சர்வதேச எல்லையில் இருந்து ஊடுருவல் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் இருவரது செயல்பாடுகளால் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும், முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருவரும் செயல்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, இருவரையும் பணியில் இருந்து விடுவித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.