Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ துணை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்க பட்னவிஸ் கோரிக்கை

துணை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்க பட்னவிஸ் கோரிக்கை

துணை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்க பட்னவிஸ் கோரிக்கை

துணை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்க பட்னவிஸ் கோரிக்கை

ADDED : ஜூன் 05, 2024 11:57 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: 'மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் தோல்விக்கு நானே பொறுப்பு; எனவே, துணை முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து கட்சியை வலுப்படுத்த அனுமதிக்கும்படி தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளேன்' என, அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் உள்ள 48 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டது. பா.ஜ., 28 இடங்களிலும், சிவசேனா 15 இடங்களிலும் போட்டியிட்டன.

தோல்வி


கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் நான்கு இடங்களிலும், ராஷ்ட்ரீய சமாஜ் பக் ஷா ஒரு இடத்திலும் களம் இறங்கின.

எதிர்க்கட்சியினரின் 'இண்டியா' கூட்டணியில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்திர பவார் கட்சி 10 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இவற்றில், இண்டியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் 23 இடங்களை பிடித்த பா.ஜ., இந்த தேர்தலில் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

சிவசேனா ஏழு தொகுதிகளிலும், தேசியவாத காங்., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மாநில பா.ஜ., தலைவர்கள் நேற்று மும்பையில் ஆலோசனை நடத்தினர்.

பொறுப்பு


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹா., துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:

மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் தோல்விக்கு முழுமையாக நான் பொறுப்பேற்கிறேன். நான் தான் கட்சியை வழிநடத்தினேன். எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து, அதை சரி செய்யும் பணியில் ஈடுபடுவேன்.

புதிய வியூகத்தை அமைத்து மக்களை சந்திப்போம். துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு, பா.ஜ., மூத்த தலைவர்களிடம் கோரிக்கை வைத்துஉள்ளேன்.

அப்போது தான், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கட்சியை வலுப்படுத்தி வெற்றி பெற வைக்க முடியும். இதற்காக கட்சித் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளேன்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருடன் சில ஒருங்கிணைப்பு சிக்கல்கள் இருந்தன. அவர்களை விரைவில் சந்தித்து, இவை குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us