பா.ஜ.,வின் சுரேஷ் கோபி வெற்றிக்கு காங்., தான் காரணம்: மார்க்.கம்யூ.,
பா.ஜ.,வின் சுரேஷ் கோபி வெற்றிக்கு காங்., தான் காரணம்: மார்க்.கம்யூ.,
பா.ஜ.,வின் சுரேஷ் கோபி வெற்றிக்கு காங்., தான் காரணம்: மார்க்.கம்யூ.,
ADDED : ஜூன் 05, 2024 11:45 PM

திருவனந்தபுரம்,: “திருச்சூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு, காங்கிரசே காரணம்,” என, மார்க். கம்யூ., மாநில செயலர் வி.எம்.கோவிந்தன் குற்றஞ்சாட்டினார்.
கேரளாவில், மார்க். கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 18; ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ., தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளரும், நடிகருமான சுரேஷ்கோபி, 74,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் வாயிலாக, கேரளாவில் தன் முதல் வெற்றிக் கணக்கை பா.ஜ., துவங்கி உள்ளது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், இடது ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று, தேர்தல் முடிவுகள் குறித்து, கேரள மார்க். கம்யூ., கட்சி யின் மாநில செயலர் வி.எம்.கோவிந்தன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி, 1 சதவீத ஓட்டு களையே இழந்துள்ளது.
அதே சமயம், ஐக்கிய ஜனநாயக முன்னணி 5 சதவீத ஓட்டுகளை இழந்துள்ளது. திருச்சூர் தொகுதியை பொறுத்தவரை, 80,000 ஓட்டுகளை காங்., இழந்ததால், பா.ஜ., வெற்றி பெற்று விட்டது.
இத்தொகுதியில், 2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது, எங்களுக்கு கூடுதலாக 6,000 ஓட்டுகள் கிடைத்துள்ளன. காங்கிரசின் ஓட்டுகள் குறைந்தது தான், சுரேஷ்கோபி வெற்றிக்கு காரணம்.
கடந்த லோக்சபா தேர்தலிலும் நாங்கள் தோல்வி அடைந்தோம். எனினும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் நாங்கள் அபார வெற்றி பெற் றோம். தற்போதைய தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் வலுவாக வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.